வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து யாழ். முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு என்ன?

Report Print Murali Murali in அரசியல்

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் யாழ். முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் நான்கு முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரித்து அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “எங்களுடைய வாக்குகளை சிதைப்பதற்காக நாளுக்கு நாள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலரும் சாடி வருகின்றனர். அவர்களை பார்த்து நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த அமைச்சர் ஒருவருக்கு யாழ். முஸ்லிம் மக்களின் பிரச்சினை எவ்வாறு தெரியும்.

மன்னாரிலும், வவுனியாவிலும், முல்லைத்தீவிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுத்தீர்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு வீடையேனும் கட்டிக்கொடுக்கவில்லையே.

ஆனால் தற்போது வடமாகாண சபை தடை ஏற்படுத்துகின்றது என கூறிவருகின்றார். இதேவேளை, வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் யாழ். முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.