கூட்டமைப்பு எமது பெயரைக் கேட்டு பயந்து மிரண்டு போய்விட்டது! சுரேஸ் பதில்

Report Print Shalini in அரசியல்

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயருக்கு தடை விதித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் தேர்தல் ஆணையாளர் இது தொடர்பில் எமக்கு கடிதம் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழரசுக்கட்சியின் செயலாளர் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் “தமிழரசுக்கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுகின்றோம். ஆனால் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயர் எமக்கு இடையூறாக இருக்கின்றது. ஆகவே இந்த பெயரை தடை செய்யப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இவ்விரு கட்சிகளுமே பதிவு செய்யப்படாத ஒரு கட்சியாகும்.

ஆகவே இவரது கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையாளர் செயற்படுவாரானால் அது தமிழரசுக்கட்சியினரை திருப்திப்படுத்தும் செயலாகவே தாம் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எமது தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பைக் கண்டு மிரண்டு போய், அச்சப்பட்ட காரணத்தினாலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை விடுக்கொடுக்க மாட்டோம் என சுமந்திரன் தெரிவிப்பது பொய்யான விடயம்.

அரசியல் சாசனத்தில் இருந்து முதலில் ஒற்றையாட்சி என்ற பதத்தை எடுத்தால் மட்டுமே மேலதிக அதிகாரங்களை எம்மால் கோரக்கூடியதாக இருக்கும்.

தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக மக்களை ஏமாற்றுவதாகவே இந்த விடயம் அமைந்துள்ளது.

சுமந்திரன் மற்றும் சம்பந்தனை தவிற வேறு யாரும் இந்த விடயம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்க தயாராக இல்லை.

வடகிழக்கு சாத்தியமில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக அண்மையில் நடந்த ஊடகசந்திப்பில் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். ஆனால் தற்போது ஏக்கிய இராச்சிய என்ற பதத்தை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இவர்களின் செயற்பாட்டால் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியவையும் கிடைக்காமல் போவதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலதிக செய்திகள் - சுதந்திரன்