உண்மையில் விருப்பம் இருக்கின்றதா? ஜனாதிபதிக்கு நாமல் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையினை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையினை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது.

இந்த அறிக்கை தொடர்பில் கடந்த 3ஆம் திகதி விஷேட அறிவிப்பொன்றை விடுத்திருந்த ஜனாதிபதி, பிணைமுறி மோசடியின் போது இழந்த நிதியை மீட்பதற்கும், குற்றவாளிகளை தண்டிப்பதற்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் பணித்திருந்தார்.

அத்துடன், நேற்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய நிலையில, பிணைமுறி விவகாரம் காரணமாக பெரும் அமளி துமளி ஏற்பட்டிருந்ததுடன், எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு ஏன் காலம் தாமதப்படுத்தப்படுகின்றது.

இழந்த நிதியினை மீட்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புவாராக இருந்தால், விசாரணை அறிக்கையினை கட்டாயமாகவும், விரைவாகவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நீண்ட காலம் சென்றுவிட்டதாக” நாமால் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.