பொய்யும் புரட்டும் கலந்த பரப்புரைகள்!

Report Print Samy in அரசியல்

அரசியல் பொய் வாக்குறுதிகளும், பொய்யான பரப்புரைகளும் இலங்கையைப் பொறுத்தவரை புதிய விடயங்களல்ல. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இந்த வழக்கம் பெரிய அளவில் தலையெடுத்திருந்ததாகக் கருதப்பட்டது.

பொய்யான வாக்குறுதிகள், பொய்யான வாயடிப்புக்கள், பொய்யான குற்றச்சாட்டுக்கள் போன்றே பொய்யான விசாரணைகளும் கூட முன்னெடுக்கப்பட்டமை குறித்த அனுபவங்கள் வாக்காளர்களுக்குக் கிட்டியிருந்தன.

இவற்றால் எந்த அளவுக்கு நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பினும், கடைசியில் இவற்றின் மூலம் நாட்டு மக்கள் பாடம் கற்றுக் கொண்டிருந்திருப்பார்களானால் எதிர்காலத்திலாவது இத்தகைய பொய்களால் ஏமாறாதிருக்க அவர்களுக்கு வாய்ப்பு அமையக்கூடும்.

வெளிநாட்டு வங்கிகளில் பெருந்தொகைப்பணம் அரச தரப்பினரால் வைப்பில் இடப்பட்டுள்ளதாகத் தலையில் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாக விமர்சனம் முன்வைத்தவர்களது குற்றச்சாட்டுக் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

யாழ்ப்பாணத்திலிருந்து தப்பித்த நகைகள் அடங்கிய வாகனம் குறித்து கதை கட்டப்பட்டதே. அது குறித்து ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டதா?

லம்போகினி கார் கொண்டு வரப்பட்டதாக பக்கிங்காமிலிருந்து குதிரை கொண்டு வரப்பட்டதென்ற கதையளத்தல் குறித்து எதாவது கண்டுபிடிக்கப்பட்டதா?

தாஜுதீன், லசந்த மற்றும் என்னொலிகொட படுகொலை கள் குறித்து ஏதாவது தகவல்கள் வௌிப்படுத்தப்பட்டனவா?

நெடுஞ்சாலைகள் புனரமைப்பு, அனல்மின் நிலையம், துறைமுகம், விமான நிலையங்கள் போன்ற மிகப்பெரும் திட்டங்கள் தொடர்பான கையாள்கையில் தரகுப்பணம் பெறப்பட்டதாக வழக்கேதும் தொடுக்கப்பட்டதுண்டா?

பொது மக்களது அத்தியாவசிய பாவனைப் பொருள்களின் விலைகள் உண்மையில் குறைக்கப்பட்டுள்ளனவா?

தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளங்கள் உயர்த்தப்பட்டுள்ளனவா?

கல்வித்துறைக்கு, அரசின் தேசிய உற்பத்தியில் ஆறு வீதம் ஒதுக்கப்பட்டுள்ளமை உண்மைதானா?

இளைஞர் யுவதிகளுக்கு இலவச ‘வைபை’ வழங்கப்பட்டனவா?

‘கசினோ’ சூதாட்ட நடைமுறை முடக்கப்பட் டுள்ளதா?

பவுணால் செய்யப்பட்டதா எனக் கேள்வி எழுப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை அமைப்புக்கான செலவினங்கள் குறைவடைந்தனவா?

தேயிலை, இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு அவற்றின் விலைகள் உறுதிப்படுத்தப்பட்டனவா?

விவசாயிகளுக்கான உர மானியம் தொடர்ச்சியாகக் கிட்டினவா?

க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக கணினிகள், டப் வசதிகள் வழங்கப்பட்டனவா?

நாட்டில் போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்தப்பட்டதா?

இவற்றைப் போன்ற ஏராளமாகக் கேள்விகளை எழுப்ப வேண்டி நேர்ந்தமைக்கான காரணம், அந்த அளவுக்கு இன்றைய ஆட்சியாளர்கள், தாம் பதவியேற்ற நாளிலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்கி வந்த வாக்குறுதிகள் மற்றும் கூறிவந்த நம்பிக்கையூட்டும் கதைகள் அத்தனையும் பச்சைப்பொய்களே என்றாகியுள்ள காரணத்தினாலாகும்.

அந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் இந்த நாட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்பது இன்று கண்முன்னாலேயே நிரூபணமாகியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக வாக்களர்களது வாக்களிக்கும் உரிமையை தேர்தல்கள் நடத்துவதைப் பிற்போட்டு ஒத்திவைத்து வந்ததன் மூலம் மீறி, நாட்டு மக்களை மடையர்களாக்கி வந்த இன்றைய ஆட்சியாளர்கள், கடைசியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியன்று நடத்த ஒழுங்கு செய்ததையடுத்து, மீண்டும் நாட்டில் அரசியல் பொய் வாக்குறுதிகளும் பொய்யான பரப்புரைகளும், தலைதூக்கியுள்ளமையைத் தெட்டத்தௌிவாக உணரமுடிகிறது.

அது சரி, இந்தத்தடவை இந்த அரசியல்வாதிகளுக்கெல்லாம் நாட்டு மக்கள் எந்த விதத்தில் தமது பலத்தை தமது வாக்குகளின் மூலம் வௌிப்படுத்தப் போகின்றனர் என ஒரு கணம் சிந்திக்க வேண்டியுள்ளது.

கடந்த சில நாள்களின் முன்னர் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விடயம் தொடர்பாக தாம் நியமித்த விசாரணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், அத்தகைய ஊழல் இடம்பெற்றமையை ஜனாதிபதி அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டமை அரசியலரங்கில் முக்கிய சம்பவமொன்றாகக் கருதப்பட்டது.

அத்தகைய ஊழல் காரணமான நட்டம் தவறிழைத்தோரிடமிருந்து அறவிடப்படுமென ஜனாதிபதி தெரிவித்தமையையடுத்து, சில தரப்பினர் அத்தகைய தவறை மூடிமறைக்க மற்றவர்களை நோக்கி விரல் நீட்டிக் குற்றம்சாட்டியமையையும் எம்மால் உணர முடிந்தது.

மத்திய வங்கி பிணை முறி வழங்கலில் ஊழல் இடம்பெற்றதாக ஜனாதிபதியே ஒப்புக்கொண்டமை பாராட்டத்தக்க தொன்றேயாயினும், இந்த விடயத்தில் வேறு சில அம்சங்களும் குறைபாடுகளாகக் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன.

குறித்த ஊழல் மோசடி காரணமாக மொத்தநட்டம் என்ற வகையில் கோடிக்கணக்கான ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இத்தகைய பெருந்தொகை நிதி மோசடி நாட்டு மக்களைப் பெருமளவில் பாதிக்குமொன்று.அத்தகைய பெருந்தொகை எவரிடமிருந்து எந்த விதத்தில் அறவிடப்படும் என்பது குறித்துத் தௌிவுபடுத்தப்படாமை நாட்டு மக்கள் மனதில் பெரும் சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது.

உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலுக்கான தினம் தீர்மானிக்கப்பட்ட சமயத்திலேயே ஜனாதிபதி மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்த தமது கருத்தை வௌியிட்டிருந்தார்.

இது தேர்தலுக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குழப்பத்தைத் தருமொன்றே.

ஏனெனில் இந்தத் தேர்தல் அரசின் இரு முக்கிய தரப்புக்களுக்கும், கூட்டு எதிரணித் தரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என்பதனாலாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன அன்னப்பட்சிச் சின்னத்தில் போட்டியிட்டார்.

அந்தக் கூட்டணியில் ஜ.தே.க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகக் கட்சி உட்பட்ட பல கட்சிகளுக்கு ஆதரவான வாக்குகளும், மைத்திரிபாலவுக்குத் தனிப்பட்ட மறையிலான ஆதரவு வாக்குகளும் அடங்கியிருந்தன.

அந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் மைத்திரிபாலவுக்கு 62 லட்சத்து 17,162 வாக்குகளும், மகிந்த ராஜபக்சவுக்கு 57 லட்சத்து 68,090 வாக்குகளும் பதிவாகியிருந்தன. 4 லட்சத்து 49,072 மேலதிக வாக்குகள் பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தேர்வானார்.

ஆனால் 2015 நாடளுமன்றத் தேர்தலில் மைத்திரிபால தரப்பும், மகிந்த தரப்பும் ஐ.ம.சு. கூட்டணியில் போட்டியிட்டதால், மைத்திரிபாலவுக்கு தனிப்பட்ட ஆதரவு வாக்குகள் இருந்திருப்பின் அது அந்தக் கூட்டணிக்கான ஆதரவு வாக்குகளை உயர்த்தியிருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததென்ன?

ஐ.ம.சு.கூட்டணியால் 47லட்சத்து 32,664 வாக்குகளையே அந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற முடிந்தது.

ஐ.தே.க, தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு, ஜே.வி.பி, முஸ்லீம் காங்கிரஸ், ஜனநாயகக்கட்சி ஆகியவை தனித்தனியே பெற வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்து 31, 653 ஆகும்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தனிப்பட்ட ஆதரவு வாக்குகள் என்று சொல்லிக் கொள்ளுமளவுக்குப் வாக்குகள் கிட்டியிருக்க வில்லை என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டணி மைத்திரிபாலவின் தலைமையின் கீழ் போட்டியிட்டதன் மூலம் மகிந்தவின் ஆதரவாளர்களது தைரியம் வீழ்ச்சி கண்டமையே கண்ட பலனாகும்.

அந்தத் தேர்தல் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன கூறியவற்றையும், மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நினைவு படுத்திப் பார்ப்பது இவ்வேளையில் பொருத்தமாக அமையும்.

ஐ.ம.சு.கூட்டணியின் தலைவரென்ற வகையில் ஆரம்பத்தில் மகிந்தவுக்கு தேர்தல் வேட்பாளர் நியமனம் வழங்க மைத்திரிபால மறுத்தார்.

பின்னர் மகிந்தவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கிய போதிலும், மகிந்தவைத் தவிர்த்து வேறொருவரைத் பிரதமர் பதவிக்குப் பெயர் குறித்தொதுக்குமாறு தெரிவித்தார்.

ஐ.ம.சு.கூட்டணி பொதுத் தேர்தலில் வெற்றி பெறுமானால் மகிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப் போவதில்லையெனப் பகிரங்கமாக அறிவித்தார்.

இவையாவும் ஜனாதிபதி என்ற ரீதியிலும் , ஐ.ம.சு.கூட்டணியின் தலைவர் என்ற ரீதியிலும் மகிந்த ராஜபக்சவை திட்டமிட்டுப் புறமொதுக்கும் விதத்தில் மைத்திரிபால செயற்பட்டிருந்தார் என்பதை நிரூபிக்கப் போதுமான சான்றுகளாகும்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கும் ஏனைய தேர்தல்களுக்கும் மக்கள் ஆதரவில் நிறையவே வேறுபாடு உண்டு.

தற்போது நாம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கவனம் செலுத்தினால் மகிந்தவின் பெருந்தொகையான ஆதரவாளர்கள் தமது வாக்குகளால் மைத்திரிபாலவுக்கு வாய்ப்புக் கிட்டுவதை விரும்பாது அந்தப் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதையே தவிர்த்திருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் வேளையில் மகிந்தவுக்கான வாக்கு ஆதரவு 58 லட்சமாகவும் அவருக்கு எதிரான வாக்குகள் 62 லட்சமாகவும் அமைந்ததாகக் கொள்ள இயலும். இதன் அடிப்படையிலேயே நாம் எதிர்வரும் தேர்தலையும் நோக்க வேண்டியுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் புதிதாக வாக்களிக்கத் தகுதிபெற்ற இளம்பரம்பரையினரது வாக்குக்கள் பெரும்பாலும் அரச தரப்புக்கு ஆதரவாக அளிக்கப்படப் போவதில்லை.

ஏனெனில் அந்த இளம்பரம்பரையினர் அரசுக்கு எதிரான மனநிலையையே கொண்டுள்ளனர். முன்னர் மகிந்தவுக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் கிட்டிய 58 லட்சம் வாக்குகளில் பெருமளமானவை இம்முறை தாமரை மொட்டுச் சின்னத்துக்கே கிட்ட இடமுண்டு எனக் கருதவேண்டியுள்ளது.

அதேசமயம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால தரப்பிலுள்ள அரசியல்வாதிகளில் பலர் 2015ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

எதிர்வரும் தேர்தலில் வெவ்வேறு தரப்புக்களாக உடையப்போவது அரசுக்கு ஆதரவாகச் செயற்படும் தரப்புக்களே.

அவர்களது வாக்குகள் ஐ.தே.க., தமிழ்ததேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி போன்ற தரப்புக்களுக்கு பிரிவடைந்து செல்லப்போகிறது.

மகிந்தவின் தலைமையிலான தாமரைமொட்டு தரப்பு 58 லட்சம் வாக்குகளைத் தன்வசம் கொண்டே போட்டியை ஆரம்பிக்கப் போகிறது என்ற நம்பிக்கை சரியானதாயின், ஐ.தே.கட்சி 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்து நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 51லட்சம் வாக்குகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத் தரப்பைத் தோற்கடிக்கப் போதுமானதாக அமையப்போவதில்லை.

இத்தகைய கணிப்பு பிழையாக அமையவும் இடமுண்டு. ஏனெனில் இடம்பெறப்போவது உள்ளூராட்சி மன்றங்ளுக்கான தேர்தலேயன்றி நாடாளுமன்றத் தேர்தல்ல.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வாக்காளர்கள் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுவதை விட தமக்கு அறிமுகமாக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவே அதிக வாய்ப்புண்டு என்பது சகலராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு விடயமாகும்.

இந்தத் தேர்தலை தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதாகப் பயன்படுத்தாது அரசுக்குத் தமது எதிர்ப்பை வௌிப்ப்படுத்தும் விதத்தில் பயன்டுத்துமாறு மகிந்தவின் தாமரை மொட்டு தரப்பு மீண்டும் மீண்டும் கோரி வருவது மேற்குறிப்பிட்ட அடிப்படையைக் கருத்தில் கொண்டேயாகுமெனக் கருதமுடியும்.

ஆயினும் அத்தகைய கோரிக்கைக்கு எந்த அளவுக்கு வாக்காளர்களிடமிருந்து ஆதரவு கிட்டுமென அனுமானிப்பதற்கு இன்னமும் காலம் கனியவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.