யாழில் புலிகளின் எழுச்சி கீதங்கள்! தென்னிலங்கையில் கிளம்பியது சர்ச்சை

Report Print Shalini in அரசியல்

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ.சு.கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் கூட்டத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தென்னிலங்கையில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களை பதிவேற்றியுள்ளார்.

“யாழ்ப்பாண்ததில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் கீதங்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன.

இதன் பொருள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனி ஈழத்தை ஆதரிப்பதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

டுவிட்டரில் நாமல் கேட்டுள்ள இந்த கேள்விக்கு பலரும் தமது அபிப்பிராயங்களையும், எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் தற்போது இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதேவேளை, தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களை ஒலிக்க விடுவது தேர்தல் விதிமுறை மீறல் மாத்திரமல்ல சட்டவிரோதமும் கூட என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.