பெருநிலப்பரப்பில் இருந்து யாழ். குடாநாடும், ஆனையிறவும் துண்டிக்கப்படும் அபாயம்!

Report Print Rakesh in அரசியல்

பூமி சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயருகின்றது. விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் யாழ். குடாநாடும் அதன் கழுத்துப்பகுதியான ஆனையிறவும்கூட கடல்நீர் புகுவதால் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளன என அஞ்சப்படுவதாக முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் மாணவர் மத்தியில் உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

"ஒரு மாடு தனக்குத் தேவையான புல்லை மாத்திரமே உண்கிறது. தன் வயிற்றுப்பசி அடங்கிய பின்னர் ஒருவாய் புல்லைத் தன்னும் அது மேலதிகமாக மேய்வது கிடையாது.

ஆனால், ஒரு சிங்கம் தனக்கு வேண்டிய உணவின் அளவைவிட மிகப் பன்மடங்கு எடைகொண்ட விலங்கையே வேட்டையாடுகிறது. இந்த வேட்டைக் குணாம்சம்தான் மனிதர்களிடமும் உள்ளது.

மனிதர்கள் நுகர்வு வெறியைக் குறைத்தால் மாத்திரமே பூமியும் ஏனைய உயிர்களும் காப்பாற்றப்படும்.

இதற்கான முயற்சியில் முன்னுதாரணர்களாக மாணவர்கள் இருக்கவேண்டும். ஒரு பொருளை வாங்கும்போது அது கட்டாயம் தேவைதானா என்று பல முறை சிந்தியுங்கள்.

வாங்கிய பின்னர் அதன் ஆயுட்காலம் முடியும்வரை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எறிவதற்கு முன்னர் இன்னமும் கொஞ்ச நாட்கள் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள் என்றும் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.