ஜனாதிபதி, பிரதமரின் படம் பொறிக்கப்பட்ட பதாதைகளை அகற்றுமாறு கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் படம் பொறிக்கப்பட்ட பதாதைகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆளும் கட்சியின் அமைச்சர்களது பதாகைகள், கட்அவுட்கள் போன்றவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.

இவ்வாறான பதாகைகளை அகற்றுவதற்கு உரிய தரப்புகளுக்கு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மினுவன்கொட பாடசாலையொன்றின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பிலான பதாகை ஒன்றில் தமது உருவப்படம் காணப்பட்டதாகவும் இதனை அகற்றுமாறு வேறும் கட்சியின் அமைப்பாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அந்த உருவப்படம் அகற்றப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் பிரதிநிதியான தமது உருவப்படம் தாங்கிய பதாகைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படம் கொண்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றமை சட்டவிரோதமானது என்பது ஏன் பொலிஸாருக்கு தெரியவில்லை.

வேட்பாளரோ அல்லது கட்சியொன்றின் தலைவரோ இல்லை என்ற போதிலும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை தாம் ஏற்றுக்கொண்டதாக பிரசன்ன ரணதுங்க கொழும்பு ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் போன்றவற்றை அகற்றுமாறு பிரசன்ன ரணதுங்க தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.