மைத்திரியின் பிரசாரமாக மாறும் தமிழீழ எழுச்சிப் பாடல்கள்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளோடு எந்தவிதமான தொடர்புகளையும் கொண்டிராதவர்கள் இன்று அந்த அமைப்பின் வாரிசுகள் என்று சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றார்கள் என வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலை நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண பிரசாரக் கூட்டத்தின் போது ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னிலங்கையில் சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளோடு எந்தவிதமான தொடர்புகளையும் கொண்டிராதவர்கள் இன்று அந்த அமைப்பின் வாரிசுகள் என்று சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றார்கள்.

இவர்கள் ஒலிபரப்புச் செய்தமை தமிழ், சிங்கள ஊடகங்களின் பெரும் செய்தியாக வெளியாகியிருக்கின்றன. தமது கருத்துக்களைச் சொல்ல ஒவ்வொருவருக்கும் சுதந்திரமும், உரிமையும் உண்டு. ஆனால் சுதந்திரக் கட்சியினரின் இந்த செயற்பாடு அத்துமீறியதாகும்.

புலிகளின் காலத்தில் அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டு இன்று அவர்களின் பெயரைச் சொல்லி தேர்தலில் அரசியல் செய்கின்றமை தவறானது.

ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களின் இந்தச் செயற்பாடு அண்ணாந்து பார்த்து துப்புவதற்கு சமமானதாகும். கொள்ளை வங்குரோத்து நடவடிக்கை தான் இது.

எங்கள் மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் அரசியல் தெளிவுள்ளவர்கள். சிலர் அவர்களுக்கு அரசியல் தெளிவு இல்லை என்று கருதுகின்றார்கள். ஆனால் அன்னப் பறவையைப் போன்றவர்கள் தமிழ் மக்கள்.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப் பாடலை ஒலிக்கவிட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டமையை வன்மையாக கண்டிக்கின்றேன் என்றார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஒலிக்கவிட்டு பிரசாரம் மேற்கொண்டமை தென்னிலங்கையில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

மைத்திரியின் பிரசாரமாக மாறும் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் என குறிப்பிட்டு தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

இதேவேளை, இது குறித்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.