வைரமுத்துவிற்கு எச்சரிக்கை! தக்க பதிலடி கொடுத்த கவிப்பேரரசு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழை ஆண்டாள் என்ற கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைக்கு எழுந்துள்ள சர்ச்சையும், அதனைத் தொடர்ந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா வைரமுத்துவ தரக் குறைவாக பேசியதும் தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், தான் கூறிய கருத்துக்கள் யாரையும் நோகடித்திருந்தால் வருந்துவதாக வைரமுத்து முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எனினும் அவருக்கு எதிரான கருத்துக்கள் குறைந்தபாடில்லை. இதனையடுத்து இன்றைய தினம் கவிப்பேரரசு வைரமுத்து விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பரப்பப்பட்டும் இருக்கிறது.

அருள் கூர்ந்து அந்தக்கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று.

குறிப்பாக என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கிற எத்தனையோ தாயுள்ளங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்று என் மனம் துடிக்கிறது.

தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உயர்ந்த பெண்களுக்கே தேவரடியார் அல்லது தேவசாதி என்ற திருப்பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன. அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள்.

பின்னாளில் தேவதாசி என்ற உயர்பொருள் நிலவுடைமைச் சமூகத்தால் பொருள் மாற்றம் பெற்றது. பழங்காலத்தில் நறுமணத்தை மட்டுமே குறித்த நாற்றம் என்ற சொல், பிற்காலத்தில் துர்நாற்றம் என்றே திரிந்துவிட்டது.

அப்படித்தான் ஆண்டாள் காலத்தில் உயர்பொருளில் வழங்கப்பட்ட சொல் பிற்காலத்தில் பொருள் மாற்றம் பெற்றுவிட்டது. பிற்காலப் பொருளைக்கொண்டு அக்காலச் சொல்லைப் புரிந்துகொள்ளக்கூடாது.

ஆண்டாளைப்பற்றி மூன்று மாதங்கள் அரிய நூல்களை படித்து தகவல் திரட்டிய நான் சுபாஷ் சந்திர மாலிக் தொகுத்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரை தொகுப்பு நூலையும் படித்தேன். அந்த கட்டுரையில் உள்ள ஒரே ஒரு வரியைத்தான் நான் மேற்கோளாக எடுத்தாண்டிருந்தேன்.

அவர்கள் தேவதாசியை எப்படி உயர்ந்த பொருளில் கொண்டிருந்தார்களோ நானும் அதே உயர்ந்த பொருளில்தான் கையாண்டிருக்கிறேன். இதைப்புரிந்துகொண்டால் எவர் மனமும் புண்படவேண்டிய அவசியம் இல்லை.

நாற்பத்தாறு ஆண்டுகளாக தமிழோடு வாழ்ந்து வருகிற நான் என்னை உயர்த்திய தமிழ்ச்சமூகத்தை புண்படுத்துவேனா? ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான். இதைப்புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எல்லோருக்கும் என் அன்பான வேண்டுகோள் என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வைரமுத்துவின் இந்தக் கட்டுரைக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வைரமுத்துவை கடுமையாக எச்சரித்தார். இதனால் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ, மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.