ஜெயலலிதா மரண மர்மம்! மௌனம் கலைப்பார்களா கார்டன் ஊழியர்கள்?

Report Print Samy in அரசியல்

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா எப்படி இருந்தார், அவருக்கு என்ன சிகிச்சை தரப்பட்டது’ என்பதைப் பற்றித்தான் தமிழக அரசு அமைத்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் இப்போது விசாரித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், மருத்துவமனைக்கு அம்புலன்ஸில் கூட்டிச்செல்ல வேண்டிய அளவுக்கு ஜெயலலிதாவுக்கு என்ன நேர்ந்தது என்ற மர்மத்தையும் அறிய வேண்டுமே!

போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் இருப்பவர்கள் மனம் திறந்து பேசினால் தான் இந்த மர்மம் வெளியில் வரும்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவும், இளவரசியும் வசித்து வந்தது பலரும் அறிந்தது தான். இந்த இருவர் தவிர சமையல்காரர், வாட்ச்மேன், தோட்டக்காரர், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என வெளியே அதிகம் தெரியாத 15 பேர் அந்த வீட்டில் வசிக்கிறார்கள்,ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து வசித்து வருகிறார்கள்.

இளவரசியின் மகன் விவேக், இவர்களுக்கு இப்போதும் மாதாமாதம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் நிழல்போல இருந்த, அவருடைய தனி பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) பெருமாள்சாமி, பி.ஏ. பூங்குன்றன் ஆகியோர்கூட போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கவில்லை. ஆனால், சாதாரண வேலையாட்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்குத் தங்கள் முதலாளி ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தெரியும் என்பதால், அவர்களை விசாரிக்க முடிவு செய்திருக்கிறது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்.

இந்த முடிவுக்கு விசாரணை கமிஷன் வரக் காரணமே, ஜெ.தீபாதான். விசாரணை ஆணையத்தின் முன்பு அவர் ஆஜர் ஆன போது, ‘‘போயஸ் கார்டன் இல்லத்தில் சமையல்காரராக இருந்த ராஜம்மாள் உள்பட அனைவரையும் விசாரிக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில், அங்கே வேலை பார்த்த 15 நபர்களின் பெயர்கள், அவர்களின் பணிகள் போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை, விசாரணை கமிஷன் முன்பு சமர்ப்பித்திருக்கிறார் பூங்குன்றன்.

அவர்கள் யார் என்கிற விவரம் தெரியாத நிலையில், அவர்களின் நதிமூலம் தேடினோம்.

ஜெயலலிதா உள்பட கார்டனில் வசித்த மற்றும் வசிக்கும் முக்கியமானவர்கள் அனைவருக்கும் சமைத்துப் போட்டவர் ராஜம்மாள். 74 வயதாகும் ராஜம்மாள், பல வருடங்களாக கார்டனிலேயே தங்கி சமையல் வேலை செய்து வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் போயஸ் கார்டன் வீட்டுக்குத் தீபா போன போது, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சகோதரர் தீபக் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராஜம்மாள்தான் வெளியே வந்து தீபாவிடம் பேசியிருக்கிறார். ‘‘ஏன் இங்கே வந்த... உன்னை ஏதாவது செய்திடுவாங்க...’’ என ராஜம்மாள் தன்னிடம் சொன்னதாக தீபா சொல்லியிருந்தார். கமிஷன் முன்பு ராஜம்மாள் என்ன சொல்லப்போகிறார் எனத் தெரியவில்லை.

மணி என்பவரின் மகள் லட்சுமி, ஜெயலலிதாவின் சுற்றுப்பயணங்களில் அவரின் உதவியாளராக உடன் சென்றவர். தேர்தல் பிரசாரம் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்ற போது, அவருடன் லட்சுமியும் பயணம் செய்தார்.

லட்சுமியைப்போல, நிறைய இளம் வயதுப் பெண்கள் கார்டனில் வேலை பார்த்தார்கள். பிறகு, அங்கிருந்து அவர்கள் சென்று விட்டார்கள். லட்சுமி, தொடர்ந்து அங்கேயே வேலை செய்து வருகிறார்.

வாட்ச்மேன் உள்பட வடமாநிலப் பணியாளர்கள் சிலரும் ஜெயலலிதா வீட்டிலேயே தங்கியுள்ளனர். வெளியே அறியப்படாத இவர்கள், ஜெயலலிதாவைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த சந்தேகம், விசாரணை கமிஷனில் உடையும்.

ஆறுமுகசாமி கமிஷனிடம் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 15 பேரும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் வீட்டில் வேலை செய்தவர்கள்; இப்போதும் வேலையில் தொடர்பவர்கள்.

அதற்கு முன்பே அங்கே வேலை செய்த பலரும் வெளியேற்றப்பட்டனர். கட்சியிலும் அமைச்சரவையிலும் அதிரடியான நீக்கமும் சேர்க்கையும் செய்வது போல, போயஸ் கார்டன் வீட்டில் வேலை செய்பவர்களையும் அடிக்கடி மாற்றுவது வழக்கமாக இருந்துள்ளது.

இப்படி நீக்கப்பட்ட சிலரையும் விசாரிக்க வேண்டும் என்றனர் நமக்குத் தகவல் அளித்தவர்கள். இப்படி அவர்கள் 14 பேர் கொண்ட ஒரு பட்டியலை அளித்தனர்.

ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த அந்த முன்னாள் ஊழியர்கள்...

1. ராமசாமி த/பெ சின்னையா (வயது 64)
2. ஐயப்பன் த/பெ மாடசாமி (வயது 47)
3. கண்ணன் த/பெ சின்னசாமி (வயது 46)
4. பொன்னுசாமி த/பெ சின்னு (வயது 46)
5. பிரபாகரன் த/பெ ராஜகோபால் (வயது 43)
6. ஞானசேகர் த/பெ பழனிசாமி (வயது 42)
7. செல்வராஜ் த/பெ லோகநாதன் (வயது 40)
8. வனிதா க/பெ கண்ணன் (வயது 39)
9. தயா த/பெ சந்திரசேகர் (வயது 39)
10. ராஜி த/பெ பிஸ்பதி (வயது 35)
11. சிங்கமுத்து த/பெ சுப்பையா (வயது 33)
12. ராதா த/பெ தனேஷ் (வயது 28)
13. ராணி த/பெ தனவேல் (வயது 28)
14. ராஜேஸ்வரி த/பெ கந்தசாமி (வயது 27)

- Vikatan