ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரி மாதம்!

Report Print Samy in அரசியல்

இலங்கை அரசியல் வரலாற்றில் ஈழத் தமிழினத்துக்கு எதிராக அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களால் இனவாதத் தீ மூட்டி விடப்பட்டதற்கும், ஜனவரி மாதத்துக்கும் ஏதோ ஒருவித நெருங்கிய தொடர்புள்ளது.

தமிழினத்தின் உரிமைகளுக்கு வேட்டு வைக்கவும் , உரிமைகளைப் பறித்தெடுக்கவும், பல படுகொலைகளை தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றவும் ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் சிங்கள இடது சாரிக் கட்சிகள் தேர்ந்தெடுத்தது, பெரும்பாலும் ஜனவரி மாதத்தையே என்றால்கூட அதில் தவறேதும் கிடையாது.

அரசியல் இலாபம் ஈட்டும் நோக்கில், இனவாதத்தை முன்வைத்து ஆட்சியைக் கைப்பற்றிய தலைமை அமைச்சரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா தலைமையிலான அரசு, தனிச்சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.

‘ஒரு மொழி என்றால் இரு நாடுகள், இரு மொழிகள் என்றால் ஒரு நாடு’ என்று நியாயத்துக்காகக் குரலெழுப்பிய கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா மற்றும் இடது சாரித் தலைவர்கள், நாடு முழுவதும் என்றல்லாது வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் செயற்படுத்தக்கூடிய தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை 1966 இல் எதிர்த்திருந்தனர்.

தமிழ் மொழிக்கு நிர்வாக மொழி உரிமையை நாட்டின் குறித்தவொரு பகுதிக்குத்தானும் வழங்கினாலும், அது சிங்கள மக்களுக்கெதிரானது எனவும், அதனால் தமிழ்மொழிக்கு சட்டரீதியான எந்தவொரு உரிமையையும் வழங்கக்கூடாது எனவும் 1966 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சித் தலைவர்கள் உட் பட மற்றும் இனவாத அமைப்புக்களது தலைவர்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு ஊர்வலத்தையும் கண்டனக் கூட்டத்தையும் நடத்தியிருந்தனர்.

ஊர்வலத்தைக் கலைப்பதற்கு பொலிசார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி உட்பட சில இனவாதக் கட்சிகளும் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஆட்சியின்போது நடைபெற்றிருந்தது.

பண்டா, செல்வா ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்த மொழி தொடர்பான குறிப்பிட்ட விதிகளை அதாவது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழையும் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தலாம் என்ற விதியை எதிர்த்து கொழும்பிலிருந்து கண்டிக்குப் பாத யாத்திரையை மேற்கொண்ட ஜே.ஆர் ஜெயவர்த்தன, 1966 ஆம் ஆண்டு ஜனவரியில் ஐக்கிய தேசியக் கட்சி – தமிழரசுக் கட்சி கூட்டரசில் குறித்த அந்தப் பிரேரணையை முன்வைத்தவர் என்பதும் இலங்கை அரசியலில் வரலாற்றின் முக்கிய பதிவாகும்.

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற்று ஆட்சியை காலம் காலமாகத் தக்க வைப்பதே அன்றைய சிங்களக் கட்சிகளின் நோக்கமாக இருந்தது.

தமிழர்களுக்கு உரிமையாயிருந்த பூர்வீக நிலங்கள், ஏனைய சொத்துக்கள் தென்னிலங்கையிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவரிடம் கைமாறியுள்ளன? பலாத்காரமாக எப்படித் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளன? என்பதை வரலாறு தெளிவுபடுத்தும்.

நாட்டின் இனவாத அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட வன்முறைக் கலாசாரம், அரசியல் இலாபம் கருதி இரு பெரும் சிங்கள தேசியக் கட்சிகளால் கடந்த 70 ஆண்டுகளாக காய் நகர்த்தப்பட்டு வருகின்றது.இதற்கு அடிப்படையாக அமைந்திருந்ததும் ஒரு ஜனவரி மாதமேயாகும். அது 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட் டாம்திகதி இடம்பெற்ற முக்கிய சம்பவமாகும்.

நாடு முழுவதும் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் மக்களை 1958ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரம் மூலமாக சிங்கள அரசியல் வாதிகள் சிங்கள மக்களுக்கு இனத்துவேசத்தையூட்டி இனப்பகையை உண்டாக்கிய வரலாறும் இச்சம்பவங்களுக்குள் அடக்கம்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முறையாக நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனைக் கொழும்பில் நடத்துமாறு அப்போதைய தலைமை அமைச்சரான சிறிமாவோ பண்டார நாயக்கா தலைமையிலான அரசு, உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினரிடம் கேட்டுக்கொண்டது.

யாழ்ப்பாணத்தில் முற்று முழுதாகத் தமிழ்மக்களே வாழுகின்ற படியினால் அங்கேயே மாநாட்டை நடத்துவதுதான் பொருத்தமாகுமெனக் கூறி அந்த அமைப்பினர் அதனை மறுத்து விட்டனர்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தொடங்கி 10 ஆம்திகதி வரை யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது, குரோத உணர்வுடன் சிறிமாவோ அரசு திட்டமிட்டு பொலிசாரைக்கொண்டு தாக்குதல்களை நடத்தி முடித்திருந்தது.

தமிழ்மக்கள் சிதறி ஓடுகையில் பொலிசார் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு கிழக்கு மாகாணத்தில் பல படுகொலைச் சம்பவங்களை தனது 11 வருடகால ஆட்சியில் நடத்தியிருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பல கிராமங்களில், மக்கள் படையினரால் கொன்றழிக்கப்பட்ட சம்பவங்களை எளிதில் எவராலும் மறந்திட முடியாது.

அதில் ஒன்று 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28, 29 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கொக்கட்டிச்சோலை தமிழ்க்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவித்தமிழ் மக்கள் படையினரின் தாக்குதல்களில் கொன்றொழிக்கப்பட்ட கொடும் துயரம் மிக்க, தமிழர்களின் நெஞ்சங்களை உறையவைத்த சம்பவமாகும்.

இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக மறைந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான யோசப் பரராஜசிங்கம் ஐ.நா.வின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார். அதன் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி அரசு செய்திருந்த அந்தப் படுகொலைச் சம்பவம் குறித்த விவரங்கள் பன்னாட்டுகள் மட்டத்தில் தெரிய வந்தன.

2006 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலையில் பிரபல கல்லூரிகளில் உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த தங்கத்துரை சிவானந்தா, மனோகரன் ரஜீகர், சண்முகராஜா கஜேந்திரன், லோ.ரோகன், யோ.ஹேமச்சந்திரா ஆகிய ஐந்து மாணவர்கள் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது அந்த வேளையில் தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தன.

அதிரடிப்படையினர் அந்த மாணவர்களை நிலத்தில் படுக்க வைத்து காதுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் மூளை சிதறி இறந்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படுகொலைகள் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் 12 ஆயுதப்படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

2014 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை மாநாட்டின்போது மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் நாயகமான நவநீதம்பிள்ளை இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்களை உள்ளடக்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட திருகோணமலை மாணவர்களது படுகொலைச் சம்பவமும் உள்ளக்கப்பட்டிருந்தது.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற தமிழர் பேரவையின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் திருகோணமலையில் 5 மாணவர்களின் படுகொலை, மூதூரில் தொண்டர் அமைப்பைச்சேர்ந்த 17 உதவிப்பணியாளர்களின்படுகொலைகள் என்பவை தொடர்பில் இலங்கை அரசு உறுதி மொழி வழங்கியிருந்தும் மகிந்த ராஜபக்ச அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றம் சுமத்தியிருந்தார்.

ஜனவரி 25 ஆம் திகதி 2006 ஆம் ஆண்டு ஊடகவியலாளரான சுகிர்தராஜன் திருகோணமலை உவர்மலையில் காலை வேளை சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் திருகோணமலையில் இடம் பெற்ற மாணவர்களின் படுகொலை சம்பந்தமாக உண்மைச்செய்திகளை துணிச்சலுடன் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச்சமம் என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப் அண்மையில் தனது ருவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

பிரதான சாட்சி வெளிநாட்டில் இருப்பதனால் இந்த வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியவில்லை எனவும், இந்த நிலையில் ஸ்கைப் தொழில் நுட்பத்தினூடாக வழக்கை முன்னெடுப்ப தாகவும் அமைச்சரான சாகல ரட்னாயக்க அமெரிக்கத் தூதுவரான அதுல் கேசாப்பிற்கு பதிலளித்துள்ளார்.

இன்றைய கூட்டு அரசுகூட இந்த வழக்கு ச் சம்பந்தமாக வாய்மூடி இருக்கின்ற நிலையில், அமெரிக்கத்தூதுவரின் கருத்து ஐந்து மாணவர்களின் படுகொலை சம்பந்தமான 12 ஆவது நினைவு மாதமான தற்போதைய ஜனவரி மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான நீதி எப்போது கிடைக்கும் என்று 12 ஆண்டுகளாக அவர்களது உறவுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தமிழ்த் தேசியத்திற்காக தன்னந்தனியாக நின்று குரல் கொடுத்த சட்டத்தரணியான குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதியன்று, முன்னை நாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் கொழும்பில் வைத்து பகல் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.அது தமிழினத்தின் பெரிய இழப்பாக அமைந்திருந்தது.

போர் இறுதிக் காலத்தில், 2008, 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதகாலப் பகுதிகளில் வன்னி பெருநிலப் பரப்பில் மகிந்த அரசின் ஆதரவுடன் படையினர் பெருந்தாக்குதல்களை மேற்கொண்டு பல அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்திருந்தனர்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதியளவில் படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திருந்த மக்கள் சகலரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து சென்றதும், ஜனவரி மாதத்திலேயே ஆகும். தமிழினத்துக்கு எதிரான சிங்கள அரசுகளின் நடவடிக்கைகள் யாவும் காலத்தின் முக்கிய பதிவுகளாகும்.

மகிந்த ஆட்சியின்போது சில ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டுமிருந்தனர். 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி, ஐக்கியதேசியக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராசா மகேஸ்வரன் கொழும்பிலுள்ள இந்து ஆலயத்தின் முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படிப்பட்ட பல சம்பவங்களுடன் பல ஆண்டுகளின் ஜனவரி மாதம் பின்னிப் பிணைந்ததான வரலாற்றுப் பதிவுகள் இலங்கையின் கறைபடிந்த வரலாறுகளாக அமைந்து விட்டுள்ளன.

- Uthayan