தமிழ் மக்களின் தேவையும் எதிர்பார்ப்பும் இதுவே!

Report Print Samy in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் ஆகியோரின் கூட்டு அரசுக்கு தனது ஆதரவை மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல் விழாவின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், கூட்டு அரசுக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசமைப்பே தமது ஆதரவுக்கான முதன்மை நோக்கம் என்றும் அவர் எடுத்தியம்பியுள்ளார். சுமந்திரனின் கருத்துக்களில் பெருவாரியானவை அரசமைப்பைச் சுற்றியே அமைந்திருந்தன.

ஆனால் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவு கண்மூடித்தனமான ஆதரவாக அமையக்கூடாது என்பதுதான் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக அமைந்துள்ளது.

புதிய அரசமைப்பை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுதல் அவசியம் என்று மூன்று முக்கிய விடயங்களை அது பட்டியலிட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு இணைப்பு,
மாகாணங்களுக்கு வழக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட முடியாதவாறான இறுக்கமான பொறிமுறை,
நிதித்துறைச் சுதந்திரம்

ஆகியவையே கூட்டமைப்பின் மூன்று அம்சக் கோரிக்கைகளாகவுள்ளன.

இந்த விடயத்தில் சிறு விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. இடைக்கால அறிக்கையில் ஓர் அங்குலம்கூட இனிக் கீழிறங்க முடியாது. நாம் ஏற்கனவே கீழிறங்கி வந்துள்ளோம்.

தெரிவுக்காக விடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் எமக்குச் சாதகமாக அமைய வேண்டும்’ எனவும் சுமந்திரன் முன்பு பட்டியலிட்டிருந்தார்.

அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்ததன் பிற்பாடு, கொழும்பு அரசியல் பிரதிநிதிகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள், பரப்புரைகள் ஆகியவை கூட்டமைப்பின் மூன்று அம்சக் கோரிக்கை நிறைவேறுவது தொடர்பில் பெரும் சிக்கலும் இழுபறியும் ஏற்படும் என்பதற்கான சமிக்ஞைகளாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றன.

இதற்கு ஆகச்சிறந்த அண்மைக்கால எடுத்துக்காட்டாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஹரிஸின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

மருதமுனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது, ‘தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கை கிழக்குடன் இணைக்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு நாங்கள் ஒருபோதும் உடன்படோம். வடக்கில் இருந்து கிழக்கு தனியாகப் பிரிய வேண்டும் என்று பாடுபட்டவர்கள் நாங்கள் என்றவாறாக அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது ஒற்றையாட்சியா, கூட்டாட்சியா என்பது தொடர்பான வெளிப்படுத்தல் இன்றளவும் துல்லியத் தன்மையுடன் ஏகோபித்த குரலாகப் பதிவு செய்யப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும், அவரது சகாக்களும் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு இம்மியளவும் இடம்கொடுக்காதவர்களாவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அரசமைப்பு உருவாகினால் கொழும்பை விட மாகாண சபைகள் அதிகாரம் பெற்றுத் திகழும். அது தமிழர் தாயகம் உருவாக வழி சமைக்கும் என்றெல்லாம் தெற்கை உசுப்பி விட்டுள்ளார் அவர்.

இனவாதத்தை வாக்கு வங்கியாகக் கொண்டுள்ள இத்தகையவர்களிடம் இருந்து இவ்வாறான கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளிவரத்தான் போகின்றன.

இத்தகைய பின்னணியிலும் , கூட்டுஅரசுக்காக தான் வழங்கும் ஆதரவு ஏன் என்பதை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும்.

அத்துடன் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியங்களையும் கூட்டமைப்பு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதுவே தமிழ் மக்களின் தேவையும் எதிர்பார்ப்பும்.

- Uthayan