போதைப் பொருளே நாட்டிற்கு பெரும் பிரச்சினை

Report Print Steephen Steephen in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசாங்கத்தை கவிழ்க்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமரை மாற்றும் தேர்தல் எனக் கூறி, மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால், அவர்களின் பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாமல், சேவை செய்யக் கூடிய நேர்மையான கிராமத் தலைவர்களை தெரிவு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலி, ஹபராதுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீடமைப்புத் தொகுதியை பார்வையிட சென்றிருந்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களான பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் போன்றவற்றை நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும். அவற்றை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். இந்த கொள்கையில் இருந்தே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். இந்த குற்றச் செயல்களுக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

போதைப் பொருள் என்பது தற்போது நாட்டிற்கு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையை போதைப் பொருட்களை பரிமாறிக்கொள்ளும் மத்திய நிலையமாக பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் அவற்றில் சில போதைப் பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால், இந்த இரண்டு வழிகளையும் நாங்கள் உடைப்போம்.

அப்படி செய்தால், சிறியளவில் விநியோகிக்க தேவையான போதைப் பொருள் இல்லாமல் போகும்.

நாடு என்ற முறையில், போதைப் பொருள் பரிமாறிக்கொள்ளும் நிலையமாக இலங்கையை பயன்படுத்தப்படுவதை நிறுத்தும் பொறுப்பு நமக்குள்ளது. இது பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியான பொறுப்பாகும்.

மேலும் நாடு முழுவதும் போதைப் பொருளை விநியோகிக்கும் குழுக்களை அடக்க வேண்டும். இதற்காகவே திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிராந்திய பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டது எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers