மாவனல்லை பிரதேச சபை நகர சபையாக தரமுயர்த்தப்படும்: பைசர் முஸ்தபா உறுதி

Report Print Mubarak in அரசியல்

மாவனல்லை பிரதேச சபையை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் தனது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதியளித்துள்ளார்.

மாவனல்லை, ஹிங்குளோயா தேர்தல் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற காமில் சாலி என்பவருக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மாவனல்லை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற தேர்தலாக இது அமைய வேண்டும். மாவனல்லை மக்கள் அரசியல் ரீதியில் ஒடுக்கப்படும் சமூகமாக மாறியுள்ளனர்.

சுமார் 40 ஆயிரம் வாக்களார்களைக் கொண்ட மாவனல்லை முஸ்லிம்களுக்கு அவர்களது தேவைகளை நிறைவேற்றுகின்ற மாற்றுத் தலைமையின் அவசியம் உணரப்படுகின்றது.

எனது அமைச்சின் ஊடாக சகோதரர் காமிலுக்கு இந்த வருடம் 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பகுதியில் பல பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஒதுக்கீடுகளை செய்யவுள்ளோம்.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று மாவனல்லை பிரதேச சபையை நகர சபையாக மாற்றுவதற்கான நடவடிக்கையினை நான் முன்னெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.