ஐ.நா பிரகடனத்தின்படி எமக்கு சுயாட்சி உண்டு!

Report Print Mubarak in அரசியல்

ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான அந்தஸ்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற, த.தே.கூட்டமைப்பின் கீழ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரு முறையும் மாற்றான் கட்சியில் இருந்து ஒரு தமிழ் பிரதிநிதி தெரிவு செய்யப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள், மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள், வன்னியிலே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் திருகோணமலையில் மாற்றான் கட்சியிலிருந்து ஒரு தமிழ் பிரதிநிதி தெரிவு செய்யப்படவில்லை.

இது எதைக் காட்டுகிறது என்றால் எமது மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். தமது வாக்குப்பலத்தை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். மக்கள் கொள்கையில் இருந்து விலகவில்லை. இது சரித்திர ரீதியாக கண்ட உண்மை.

சர்வதேச ரீதியில் இந்த தேர்தலை பலர் உற்று நோக்கிக் கொண்டு உள்ளார்கள். வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் விசேடமாக ஒருமித்து நிற்கின்றார்களா என்று?

ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை பிரகடனத்தின் படி மக்களை அவர்களின் சம்மதம் இல்லாமல் ஆட்சி புரிய முடியாது. ஆனால் கடந்த 70 வருடங்களாக எமது சம்மதம் இல்லாமல் எங்களை இந்த நாட்டில் ஆட்சி புரிபவர்கள் எம்மை ஆண்டு வந்துள்ளார்கள்.

இது ஒரு தொடர்கதையாகவே உள்ளது, 1947 முதல் இன்று வரை இந்த நாட்டை ஆண்டவர்களுக்கு நமது சம்மதத்தை நாம் கொடுக்கவில்லை, சம்மதத்தை கொடுக்காமலேயே நம்மை ஆண்டு கொண்டுள்ளார்கள்.

இதை முன்னைநாள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கிமூன் இலங்கைக்கு வந்திருந்த போது நான் தெளிவாக சொல்லி இருந்தேன்.

ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான அந்தஸ்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம். அது நடைபெறாவிட்டால் எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.