மைத்திரியை எவரும் விமர்சிக்கக் கூடாது! ரணில் எச்சரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து யாரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையோ அறிக்கைகளையோ வெளியிடக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செயற்குழுக்கூட்டத்திலேயே பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிறிகொத்தாவை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில்,

பிணைமுறி விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, ஊழல் வாதிகள் குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை குறித்தும் ஜனாதிபதி தன்னுடைய விசனத்தை வெளியிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் திருடன், திருடன் என்று மகிந்த தரப்பினர் ரணிலைச் சொல்ல, திருடன், திருடன் மகிந்த திருடன் என்று ஐதேகவினர் திருப்பிச் சொல்ல அது நாடாளுமன்றத்தில் அமளிதுமளியாக முடிந்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி திருடர்கள் யார் என்று மக்களுத் தெரியும் என்றும், புறக்கோட்டையில் பிட்பொக்கெற் திருடர்கள் கதை குறித்தும் நகைச்சுவையாகச் சொல்லி, அதே போன்ற நிலைமையே ஏற்பட்டிருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு ஐதேகவினர் எதிர்வினையாற்றியிருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேவேளை, நாங்கள் பிட்பொக்கெற்காரர்கள் தான். மகிந்தவின் அமைச்சரவை பிட்பொக்கெற்றிலிருந்து மைத்திரியை எடுத்து ஜனாதிபதியாக்கினோம் என்றார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர், மரிக்கார்.

இது பெரும் வாதப்பிரதிவாதமாக மாறியிருந்த சூழ்நிலையில், வேறு சில உறுப்பினர்களும் ஜனாதிபதி குறித்து விமர்சித்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற கூட்டத்தில், அரசாங்கத்தின் மற்றொரு பங்காளியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் நேரடியாக அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து யாரும் விமர்சித்து அறிக்கையோ பேட்டியோ கொடுக்கக் கூடாது என்றும் அவர் கட்சி உறுப்பினர்களை எச்சரித்தாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தான் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தவறாக திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அல்லது தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர், மரிக்கார் இந்தக் கூட்டத்தின் போது கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.