கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம்! கூட்டரசு முடிவுக்கு வரும் சாத்தியம்

Report Print Rakesh in அரசியல்

கூட்டரசிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சொற்போர் உக்கிரமடைந்துள்ளது.

பிணைமுறி அறிக்கை வெளியான பிறகு இரு தரப்பும் பகிரங்கமாகவே ஏட்டிக்குப் போட்டியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்துக்கொள்கின்றன.

இதனால், தேசிய அரசின் ஆயுட்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றகையோடு மஹிந்தவின் அமைச்சரவை கலைந்தது. அதன்பின்னர் தேசிய அரசு அமைக்கப்பட்டது.

19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது புதிய தேர்தல் முறைமை, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் ஒழிப்பு ஆகிய விவகாரங்களால் ஆரம்பத்தில் இரு கட்சிகளுக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது.

ஆளுங்கட்சியிலுள்ள இரு அணிகளுமே சொற்போரில் ஈடுபட்டன. அதன்பிறகு தீர்மானங்களை எடுக்கும்போது இடையிடையே மோதல்கள் வெடித்தன.

இந்நிலையில், தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.

அதற்கு முதல்நாள் 30ஆம் திகதி பிணைமுறி மோசடி விசாரணை அறிக்கையும் வெளியானது. இதையடுத்தே இரு கட்சிகளுக்குமிடையிலான கருத்து மோதல் உக்கிரகட்டத்தை நெருங்கியுள்ளது.

இதன் உச்சகட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். தமது கட்சியின் புண்ணியத்தால்தான் ஜனாதிபதியானார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்குப் பதிலடி கொடுத்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். சுதந்திரக் கட்சி உறுப்பினர்களால்தான் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இரு கட்சி உறுப்பினர்களும் பொதுவெளியில் பகிரங்கமாக ஏட்டிக்குப் போட்டியாக சொற்போரில் ஈடுபடுவதால் கூட்டு அரசின் ஆயுட்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டுவரை ஆட்சி தொடருமா என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலும் நடைபெறவுள்ளதால் கூட்டரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறக்கூடும் என்றும், அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஏனைய சில எம்.பிக்களின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் கூட்டரசு கலைந்துவிடும்.