மகிந்த பாணியில் உலகத் தலைவர்கள்! தமிழில் வாழ்த்துச் சொல்வதன் பின்னணி?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

உலகத் தமிழர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களின் பொங்கல் தின வாழ்த்துச் செய்திகள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பது தமிழரின் மரபு. எந்தத் தொழிலை செய்தாலும், அது தான் முதல் கடவுள். இந்தப் பூமியின் ஆதாரமே சூரியன் தான்.

சூரியனை முதல் கொண்டு தான் உலகும், உலக உயிரினங்களும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே உயிர்களின் ஆதாரமாக இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைப் பொங்கலை தமிழர்கள் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக காலையில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைக்கிறார்கள். அதே போன்று பொங்கலுக்கு மறுநாள், பட்டிப் பொங்கல், உழவர் பொங்கல் என்று சிறப்பிக்கிறார்கள்.

விவசாயத்திற்கு முதல் தேவையாக இருந்த காளைகளுக்கும், பசுக்களுக்கும் பொங்கல் வைத்து அவற்றையும் கௌரவப்படுத்துகின்றனர் தமிழ் மக்கள்.

தமிழ் மக்களின் இத்தகைய சிறப்புமிக்க நாளில் உலகத் தலைவர்கள் தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகம் முழுவதும் தமிழ் மக்கள் பரந்து வாழ்கின்றார்கள். தமிழர்கள் இல்லாத நாடே இல்லை என்றளவிற்கு எல்லா நாட்டிலும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தமது நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்தினைதெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, இந்தியப் பிரதமர், கனடா, பிரித்தானியப் பிரதமர்கள் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து தமிழ் மக்களை கவர்ந்திருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று தன் அரசியல் வாழ்க்கையை முன்னெடுக்க மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு தமிழில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதும், தமிழில் உரையாற்றுவதும் என்று தன்னை தமிழ் மக்களின் அபிமானியாகக் காட்டிக் கொண்டார்.

தமிழ் மக்களின் தேவை என்பது இலங்கை அரசியலில் ஆட்சியதிகாரத்தைப் பிடிப்பதற்கான ஒரு ஊக்கியாகக் காணப்படுகிறது. மைத்திரியை ஆட்சியில் அமர்த்தியதும், மகிந்தவை தூக்கி வீசியதும் தமிழ் மக்களின் வாக்குகள் தான். அந்தளவிற்கு இப்பொழுது நிலைமை மாறியிருக்கிறது.

இதனை நன்கு உணர்ந்தவர் மகிந்த. இதே பாணியினை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனும் பயன்படுத்தியிருந்தார். அவரும் தமிழில் வணக்கம் சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.

இந்தப் பின்னணியை இன்று உலகத் தலைவர்கள் பயன்படுத்துக்கின்றார்கள். உலக நாடுகளில் ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கணிசமானளவு தாக்கத்தை செலுத்துகின்றன. எனவே தமிழ் மக்களை கவர்ந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது.

அதேபோன்று தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் வாக்குகளைப் பெற வேண்டியதும், தமிழக மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் மோடியின் கனவு. இதன்பொருட்டு அவரும் தமிழ் மக்களை குளிர வைக்க எத்தணிக்கிறார்.

ஆக, மகிந்தவின் பாணியில் மக்களை கவர்ந்து கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. எனினும் தமிழை இந்தத் தலைவர்கள் பேச வேண்டும், தமிழில் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று முயற்சிப்பது தமிழ் மக்களின் அடையாளம் என்றைக்கும் அழியாது என்பதை எடுத்துக் காட்டுகிறது.