அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியேற காரணம் இதுதான்! ஜனாதிபதி கூறிய விளக்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சரவைக் கூட்டத்தின் இடையே தாம் தேநீர் பருகவே சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமது அதிருப்தியை வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநடப்புச் செய்தாதக தகவல் வெளியாகியிருந்தது.

பின்னர், அவரை பிரதமர் மற்றும் ஏனைய சில அமைச்சர்களும் சென்று மீண்டும் அழைத்து வந்ததாகவும் அறியமுடிந்திருந்தது. இதனால், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில கடும் சர்ச்சை நிலை ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி இயற்கை தேவையின் நிமித்தம் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளியே சென்றதாவும், பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து தாம் வெளியேறியமைக்கான காரணத்தை ஜனாதிபதி இன்று மாலை வெளியிட்டார்.

அமைச்சரவைக் கூட்டத்தின்போது தேநீர் அருத்துவதற்காக தாம் வெளியே சென்றதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பௌத்த தத்துவ அடிப்படையில் உபேதசம் ஒன்றை வழங்கினேன். அதனை ஊடகங்கள் பல்வேறு வகையில் அறிக்கையிட்டுள்ளன.

சுமார் 30, 35 நிமிடங்கள் உபதேசம் வழங்கிவிட்டு, அரசாங்கத்தை சிறந்த முறையில் கொண்டுசெல்ல வேண்டும் என்றும், அதற்கு தயாராக வேண்டும் என்றும் கூறினேன்.

இது பற்றி சிந்தனை செய்யுமாறு கூறி, இன்னும் சற்று நேரத்தில் வருவதாகக்கூறிச் சென்று, தாம் தேநீர் அருந்திவிட்டு வந்து அமைச்சரவையில் அமர்ந்து கூட்டத்தை தொடர்ந்து நடத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.