ஜெயலலிதா மரணத்தை வைத்து நடக்கும் விளையாட்டு: மீண்டும் என்ன சொல்கிறது அப்பல்லோ?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு மக்களையும், ஊடகங்களையும் குழப்பி வருகிறார்கள் அரசியல் தரப்பினர்.

கடந்த 2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டிசம்பர் 5ம் திகதி இரவு மாரடமைப்பினால் அவர் உயிரிழந்தார் என்று அறிவித்தது அப்பல்லோ மருத்துவமனை.

உயிரிழந்த மறுநாள் 6ம் திகதியே அவரின் உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதிக்குப் பின்னால் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் இறந்தது தொடர்பில் பல்வேறு சந்தேகங்களையும், மர்மத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள் அரசியல் தரப்பினர்.

இந்நிலையில், எடப்பாடி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தவுடன், விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் நடந்துவருகின்றன.

முன்னதாக, ஜெலலிதா இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்று பகீர் தகவலை வெளியிட்டிருந்தார் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ஒருவர்.

ஆனாலும் அப்படியொன்றும் நிகழவில்லை என்றது மருத்துவமனை. இதற்கிடையில் கடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னர் ஜெயலலிதா மருத்துவமனையில் பளச்சாறு குடித்துக் கொண்டிருப்பது போல ஒரு காணொளியை வெளியிட்டனர் தினகரன் தரப்பினர்.

ஜெயலலிதா முன்னதாக இறக்கவில்லை என்றும், அவர் தேக ஆரோக்கியத்தோடு இருந்தார் என்றும் குறிப்பிட்டார்கள். இந்நிலையில், இன்றைய தினம் திவாகரன் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

அப்பல்லோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் திகதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்திருக்கிறார்.

எனினும் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது என்று அப்பலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2016 டிசம்பர் 5-ம் திகதி ஜெயலலிதா மரணத்தை அறிவித்ததில் மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது எனவும் டிசம்பர் 5-ம் திகதி தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையைதான் தெரிவித்து உள்ளோம் என்றும் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, ஜெயலலிதா மரணம் பற்றிய தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திவாகரனும் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த சர்ச்சையான முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் தமிழக மக்களை வெறுப்பிற்குள்ளாக்கியுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.