புலிகளை வைத்து வாக்கு யாசகம்!

Report Print Sathriyan in அரசியல்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரங்களில் வழக்கம் போலவே விடுதலைப் புலிகளும் விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை காலமும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தான் விடுதலைப் புலிகளையும் அவர்களின் எழுச்சிப் பாடல்களையும் தேர்தல் பிரசாரங்களின் போது பயன்படுத்தி வந்தன.

இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அவர்களின் பாடல்களை ஒலிக்க விட்டு வாக்கு கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் மறைந்த எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா என்ற பாடல் ஒலிக்க விடப்பட்டது.

இதுபோன்று வேறும் பல எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச சம்பவம் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது போலவே தென்னிலங்கை அரசியலிலும் இதற்கான எதிர்வினைகள் ஒலித்தன.

தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த நடவடிக்கை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போரை நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே புலிகளின் பாடல்களை ஒலிபரப்பி வாக்கு கேட்பதா என்ற கொந்தளிப்பு மாத்திரமே அதற்கு காரணம் அல்ல. விடுதலைப் புலிகளின் பாடல்களைப் பயன்படுத்தி வாக்கு கேட்கின்ற தமது ஏகபோக உரிமையையும் தேசியக் கட்சி ஒன்று தட்டிக் கொண்டு போய் விடுமோ என்ற பயமும் கூட அதற்குக் காரணம் தான்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராக உருவெடுப்பதற்கும், பெரும் அழிவுகள் ஏற்படுவதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காரணமாக இருந்திருக்கிறது.

தனிச் சிங்களச் சட்டம் தமிழர் தரப்புகளுடனான ஒப்பந்தங்களை கிழித்தெறிந்தமை, இனக்கலவரம் என்று பல்வேறு காலகட்டங்களிலும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்பாக இருந்து வந்திருக்கிறது.

அதற்காக ஸலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்புக் கோரவோ இல்லை. அதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று புலிகளின் பாடல்களை ஒலிபரப்பி வாக்கு கேட்கிறது.

இந்தளவுக்கு சுதந்திரக் கட்சி வங்குரோத்து அரசியல் நிலைக்கு வந்து விட்டது என்பதை மாத்திரம் இது வெளிப்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் இன்னமும் கூட தமிழர் அரசியலில் ஒரு நீங்க முடியாத நிழலாகப் பரவியிருக்கிறார்கள் என்பதையும் கூட வெளிப்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் கூறியே வாக்கு வேட்டையாடி வந்திருக்கின்றன.

வடக்கிலும் தெற்கிலும் வெவ்வேறு முகத்தடன் அரசியல் நடத்துவதற்கான இப்படியொரு பாதையை தேசியக் கட்சிகளுக்கு காண்பித்துக் கொடுத்தவர் காலஞ்சென்ற அமைச்சர் மகேஸ்வரன் தான்.

அவர் அரசியலுக்குள் நுழைந்த போது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளையும் அரசுடன் இணைந்து தமிழ் தேசியத்துக்கு எதிராக அரசியல் நடத்திக் கொண்டிருந்த ஈபிடிபியையும் ஒருங்கே சமாளிக்க வேண்டியிருந்தது.

அதனால் அவர் தெற்கில் ஐதேக பின்பற்றும் கொள்கைகளை வடக்கில் முன்வைத்தால் சரிப்படாது என்று விடுதலைப் புலிகள் சார்பு கொள்கை ஒன்றை வெளிப்படுத்த முனைந்தார். அது அவருக்கு கைகொடுத்தது.

அதையே தான் இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. மூன்று கூட்டணிகளாகப் பிரிந்திருக்கும் தமிழத் தேசியக் கட்சிகள், ஈபிடிபி, ஐதேக இவற்றுடன் மோதி ஆசனங்களைக் கைப்பற்றுவதாயின் மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்தியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிய் கொள்கைகளை முன்னிறுத்தியோ பயனில்லை என்பதை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உணர்ந்திருக்கிறார்.

அதனால் அவர் விடுதலைப் ’புலிகள் சார்4ந்ம ஒரு நிலைப்பாட்டையும் எடுத்ததமிழ் தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கியை உடைப்பதற்கு திட்ட்மிட்டுள்ளார். சித்திரையா தமிழா என்று அவர் தட்டியெழுப்ப முயன்றது.

தமிழ்த் தேசிய வாக்காளர்களைத் தான் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பொதுவாகவே அபிவிருத்தி அரசியலை முன்னிறுத்துவதில்லை என்பது பரவலாக கூறப்படுகின்ற ஒரு குற்றச்சாட்டு.

தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அபிவிருத்தி அரசியல் எட்டாக்கனி தான்.

ஏனென்றால் அரசாங்கங்களுக்கு எதிராகவே அரசியல் செய்து வந்த தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால் அபிவிருத்தி அரசியலை முன்னெடுப்பதற்கு வாயப்புகள் இருக்கவில்லை.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் மட்டத்தில் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அதனை சரியாக முன்னெடுக்கவில்லை என்றே கூறலாம்.

அரசாங்கத்துடன் அண்டியிருந்த ஈபிடிபி தான் சலுகை, அரசியல், அபிவிருத்தி அரசியலை சரியாக முன்னெடுத்திருந்தது.

தமிழ் மக்களை நோக்கி சலுகைகளையும், நிதியுதவிகளையும் நீட்டுவதன் மூலமும், வேலை வாய்ப்புகள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமும் தமிழர் அரசியலில் நிலையான இடத்தைப் பிடிக்கலாம் என்று கணக்குப் போட்டது..

போரினால் சீரழிந்து போயிருந்த வீடுகள் அப்படியே இருக்க, அகதிகள் ஒழுகும் குடில்களில் வாழ, கோவில்களுக்கும் கும்பாபிஷேகங்களுக்கும் அபிவிருத்தி அரசியல் நிதியைக் கொட்டியது. பொது அமைப்புகளுக்கு நிதியுதவிகள் அள்ளி வீசப்பட்டன. இதனால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொதித்தனர்.

அதேவேளை வேலை வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்து தம் பக்கம் தமிழ் மக்களை சாய்ப்பதில் ஈபிடிபி கடினமாக முயற்சித்தது.

விடுதலைப் புலிகளின் காலத்திலேயே அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலை முன்னெடுத்தது.

ஈபிடிபியின் இந்த அரசியலை ஒரு கட்டத்தில் பசில் ராஜபக்ச தமக்குச் சாதகமாக திருப்பிக் கொண்டார். ஈபிடிபியை தனித்துப் போட்டியிட விடாமல் தடுத்து வெற்றிலையில் போட்டியிட செய்தார்.

டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து அபிவிருத்தி அரசியலை பிடுங்கி தனது கைக்குள் வைத்துக் கொண்டார். கடைசியில் இரண்டு பேருமே அதில் தோல்வியுற்றனர்.

அதுபோலவே ஐதேக ஆட்சியில் இருந்த காலத்தில் டக்ளஸ் தேவானந்தாவைப் பின்பற்றி முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனும் அபிவிருத்தி சலுகை அரசியலை முன்னெடுத்துப் பார்த்தார்.

அவர் டக்ளஸ் தேவானந்தா அளவுக்கு அதில் வெற்றி பெறவில்லை. டக்ளஸ் தேவானந்தாவின் அபிவிருத்தி அரசியல் புலி எதிர்ப்பு அரசியலுடன் பின்னிப் பிணைந்ஹதிருந்தது. புலிகளின் ஆதரவாளர்கள் ஈபிடிபியை முற்றாக வெறுத்தனர். துரோகிகளாகவே பார்த்தனர்.

புலி எதிர்ப்பு அரசியல் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான அரசியல் முன்னெடுப்புகளால் அபிவிருத்தி சலுகைகளின் மூலமாகக் கூட தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியாது போனது.

விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் கூட ஈபிடிபியினால் தலையெடுக்க முடியாதிருப்பதற்கு பிரதான காரணம் கடந்த காலத்தில் செய்த புலி எதிர்ப்பு அரசியல் தான்.

அதேவேளை ஈபிடிபி இன்னமும் ஓர் அரசியல் கட்சியாக தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதற்குக் காரணம் அபிவிருத்தி சலுகை அரசியல் போக்கு தான் என்பதையும் மறுக்க முடியாது.

வடக்கில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடன் சிங்கள பௌத்த தேசியவாதக் கட்சி ஒன்றினால் போட்டி போட முடியாது என்பது மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே உறுதியாகி விட்டது.

அதனால் தான் வெறுமனே அபிவிருத்தி அரசியலுடன் மாத்திரம் நின்றால் வடக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்து புலி ஆதரவு நிலைப்பாட்டுடன் அதனை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார் அங்கஜன் இராமநாதன்.

தமிழ்த் தேசிய கட்சிகள் உரிமை பற்றிப் பேசிப் பேசியே அபிவிருத்தியைக் கோட்டை விட்டு விட்டன என்று கூறி உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்ற கோசத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.

ஓர் அரசாங்கமாக வடக்கில் அபிவிருத்தியை முன்னெடுத்தாலும் தமிழர்களுக்கான உரிமை விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த உரிமையை வழங்கப் போகிறது. எத்தகைய உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்று தெரியவில்லை.

முழுமையான அதிகாரப்பகிர்வுக்கே தயாரில்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறது.

தேர்தல் என்று வந்து விட்டால் யாருடைய காலையும் பற்றிக் கொள்ளலாம், எந்த வாக்குறுதியையும் வழங்கலாம், எந்த நிலைக்கும் போகலாம் என்ற நிலைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சென்றிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் மக்களுக்கு எதிரான போரை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று உலகெங்கும் பிரசாரம் செய்யும் ஜனாதிபதியின் கட்சியே அவர்கள் யாரைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுகின்றனரோ அவர்களின் பாடல்களை வைத்து வாக்குகளை யாசகம் கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சரி பிழைகளுக்கு அப்பால் மகிந்த ராஜபக்ச ஒருபோதும் இத்தகைய விடயங்களில் விட்டுக் கொடுப்பவராக நடந்து கொள்ளவில்லை.

மைத்திரிபால சிறிசேனவின் நெகிழ்வுத் தலைமைத்துவம் தான் வடக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு யாசகத்துக்கு துணையாக இருக்கிறது.