ஆபத்தான கட்டத்தில் கொழும்பு அரசியல்! குத்தாட்டம் போடும் அரச தலைவர்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

சமகாலத்தில் இலங்கை அரசியலில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசியலில் இருவேறு சக்திகளாக இயங்கிய இரண்டு முக்கிய கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசு உள்ளக முரண்பாடுகள் காரணமாக ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

கூட்டாட்சி அமைக்கப்பட்டு பூரணமாக மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த உள்ளக முரண்பாடுகள் தேசிய ரீதியில் மாத்திரமின்றி சர்வதேசத்தின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளன.

கடந்த நாட்களில் இலங்கை அரசியலில் அதிகம் பேசப்பட்டு வந்த விடயம் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையும், இது குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பும்தான்.

அத்துடன் நல்லாட்சி அரசின் ஸ்த்திரத்தன்மையை ஆட்டம் காண வைத்த அறிக்கையாகவும் இந்த அறிக்கை பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், மோசடி விவகாரத்தினைத் தொடர்ந்து நல்லாட்சியின் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன், இரண்டு கட்சியினரும் மாறி மாறி ஒருவர் செய்த ஊழலை மற்றொருவர் வெளிப்படுத்தும் செயற்பாட்டில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள், கூட்டரசாங்கத்தின் ஆயுள் இவ்வளவுதான் என்ற மனோநிலையை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளன.

இவர்களது முரண்பாடுகள் வலுவடையும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க முற்படலாம்! அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க முற்படலாம்! என்ற ஒரு சந்தர்ப்பத்தை தோற்றுவிக்கும்.

இது இவ்வாறிருக்க, அரசின் முக்கிய தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்த பொருளாதாரம் தொடர்பான பொறுப்பை இந்த ஆண்டுமுதல் தாம் கையேற்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அதிரடி அறிவிப்பை குறிப்பிடமுடியும்.

அத்துடன், மோசடி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க எனக்கு உதவுங்கள் எனவும், என்னை பலவீனப்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பகிரங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதில் முக்கியமாக ஐக்கிய தேசியக் கட்சியியை சேர்ந்த முக்கியப்புள்ளிகளே பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மாறி மாறி தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் சாடுவதும் கூட அவர்களின் மோதல் நிலையை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது.

இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கவேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியினரிடையே கோரிக்கையை முன்வைத்துள்ளமை சிறிது குழப்பநிலையையும் வெளியுலகத்தினருக்கு தோற்றுவித்துள்ளது.

நிலை இவ்வாறிருக்க கூட்டரசின் முக்கிய மூன்று தலைமைகளான மைத்திரி, ரணில், சந்திரிக்கா ஆகியோர் தற்போது நாட்டு மக்களது கவனத்தை ஈர்க்கும் வகையிலோ அல்லது மக்களைத் திசை திருப்பும் வகையிலோ செயற்பட்டு வருகின்னறமை சற்று கேளிக்கைக்குரியதாகியுள்ளது.

தற்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அரச தலைவர்களின் நடனங்கள் இதற்கு சான்று.

அரசியல் தவிர்ந்த புற விடயங்களில் தம்மை பிரபல்யப்படுத்திக்கொண்டு வருகின்றனர் என்றே கூறலாம்.

பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆடிய நடனம் சமூக வலைத்தலங்களில் வெகுவாக பரவியது.

அந்த நடனத்தின் தொடர்ச்சியாய் அடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் நடனம் ஒன்று சமூக வலைத்தளங்களில் ஊடுறுவியது.

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடனம் ஒன்று சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்துள்ளது.

அரசு தளம்பல் நிலையில் சென்றுக்கொண்டிருக்க, அரச தலைவர்களிடையே முரண்பாடுகள் முற்றிச்செல்ல, நல்லாட்சி அரசின் ஆயுள் நிறைவுக்கு வந்துவிடுமோ என்ற அச்ச நிலையில் மக்கள் எதிர்ப்பார்த்திருக்க இவர்களது நடனம் அனைவரிடத்திலும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

தேர்தல் கால வாக்குறுதிகள் தான் பொய்த்துப்போகும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்க, அரச தலைவரகளின் விசேட அறிவித்தல்களும், முக்கிய அறிவித்தல்களும், அதிரடி அறிவிப்புக்களும் கூட பொய்த்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வெளி இடங்களில் நடனங்களின் மூலமும், அறிவிப்புக்களின் மூலமும் மக்களின் கவனத்தை தன்பால் ஈர்க்கும் முயற்சி சமகால அரசியல் கள நிலவரங்களில் இருந்து மக்களின் போக்கை திசை திருப்பும் நோக்கமாவும் இருக்கலாம். அல்லது தேர்தல் காலத்தில் மக்களின் பார்வையை ஈர்ப்பதாகவும் இருக்கலாம்.

இருப்பினும் எமது அரச தலைவர்களின் இந்த புதிய முயற்சிகள் சற்று விமர்சனத்திற்குரியது எனினும் உலக அளவில் எமது அரச தலைவர்களின் ஒற்றுமையை பறைசாற்றுகின்றது.