தமிழ் அரசியலில் துரோகிகள்!

Report Print Karthik in அரசியல்

பரபரப்பாகியிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் பிரசார அரங்கில் துரோகி என்ற வசை மிகத் தாராளமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

யாரும் யாரையும் இலகுவாக விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பான ஒரு சொல்லாக துரோகி என்ற சொல் அறிமுகமாகியிருக்கிறது. அதுவும் அண்மைய அரசியல் அரங்கில் இத்தகைய குற்றச்சாட்டை எந்த முகாந்திரமும் இல்லாமலேயே முன்வைக்கின்ற நிலையும் காணப்படுகிறது.

ஒருவரை துரோகி என்று குற்றம் சாட்டும் ஒருவர் அத்தகைய குற்றச்சாட்டை சுமத்துவதற்கு தாம் எந்தளவு தகைமையுள்ளவர் என்பதை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை.

அவ்வாறு சாடியவரை நோக்கி துரோகியாக பட்டம் சூட்டுவதற்கு நீ யார் என்று கேள்வி எழுப்பினால் அல்லது அதற்கான தகைமை தொடர்பாக கேள்வி எழுப்பினால் பெரும்பாலானவர்கள் விக்கித்துப் போய் நிற்பார்கள். அதுதான் உண்மையான நிலை.

தமிழ் அரசியல் பரப்பில் துரோகி என்ற சொல்லுக்கு நீண்ட வரலாறு உள்ளது.

டி.எஸ்.சேனநாயக்காவின் அமைச்சரவையில் ஜி.ஜி.பொன்னம்பலம் இணைந்த போது செல்வநாயகம் தலைமையிலான பெடரல் கட்சியினர் அவரைத் துரோகி என்று தூற்றினர். பின்னர் ஒரு கட்டத்தில் செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி டட்லி சேனநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டது.

அப்போது தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தார். அப்போது தமிழரசுக் கட்சியினால் அவர் துரோகியாக தூற்றப்பட்டார்.

அதற்குப் பிறப்பட்ட காலங்களில் தோன்றிய ஆயுதப் போராட்டமும் துரோகிகள் களையெடுப்பில் தான் தொடங்கியது. அதேவேளை, தமிழரின் அரசியல் போராட்டத்திலும், ஆயுதப் போராட்டத்திலும் துரோகிகள் நிரம்பியிருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.

அதனால் தான் துரோகிகள் என்ற அடையாளப்படுத்தல்கள் தாராளமாகவே வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன.

யாழ்.மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவை விடுதலைப் புலிகள் துரோகி என்ற அடையாளப்படுத்தலுடன் தான் சுட்டுக் கொன்றனர். முதலில் துரோகிகள் களையெடுப்பு பின்னரே எதிரிகள் என்ற கொள்கையை அப்போது கையாண்டனர்.

இதற்கமைய தமிழ் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு தகவல்களை வழங்கிய முகவர்கள், உளவாளிகள் தான் இலக்கு வைக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் பின்னர் துரோகிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட போது தமிழ் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் போலவே ஏனைய ஆயுதப் போராட்ட அமைப்புகளும் துரோகிகள் என்று பலரையும் போட்டுத் தள்ளியுள்ளன.

அதுபோலவே தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புகளும் ஒன்றையொன்று துரோகிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டதும் கடந்த கால வரலாறு.

ஆயுதப் போராட்ட அமைப்புகள் மாத்திரமன்றி அப்போதிருந்த தமிழ் அரசியல் தலைமைகளும் கூட துரோகிகளாக தமது அரசியல் எதிராளிகளை அடையாளப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை. அந்தநிலை இன்றும் தொடர்கிறது.

சம்பந்தனையும் சுமந்திரனையும் தமிழினத் துரோகிகள் என்று அடையாளப்படுத்தும் சிலரின் கடந்த காலம் அவர்களுக்கே மறந்து விட்டது.

தமிழரசுக் கட்சியில் உள்ளவர்களும் ஏனைய கட்சியினரும் துரோகத்தனங்கள் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அதற்கான தகைமை பற்றி அவர்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லை.

ஜி.ஜி.பொன்னம்பலம், வி.நவரத்தினம், அல்பிரட் துரையப்பாவில் தொடங்கிய துரோகிகள் பட்டியல் இன்று சுமந்திரனில் வந்து நிற்கிறது.

இவர்கள் துரோகிகளா இல்லையா என்பதை ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. அவர்கள் தூய்மையானவர்கள் என்று வாதிடும் நோக்கமும் இல்லை.

துரோகிகள் பக்கம் திருப்பப்பட்ட கவனத்தினால் தமிழ் மக்கள் அரசியலிலும் ஆயுதப் போராட்டத்திலும் நிறையவே இழந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் உரிமைகளுக்கானது. ஆயுத வழியிலும் அரசியல் வழியிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக அது தொடர்கிறது.

இந்தப் போராட்ட்த்தில் துரோகிகள் என்’று அடையாளப்படுத்தி ஒதுக்கப்பட்டவர்கள், ஒழிக்கப்பட்டவர்களால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

பிரதான இலக்கின் மீதான கவனத்தை தவற விடுவதற்கு இது காரணமாகவும் அமைந்திருக்கிறது. இது வரலாற்று உண்மை.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் துரோகிகள் அழிப்பில் கவனம் செலுத்தப்பட்டதால் தான் இயக்கங்களின் வளர்ச்சி சாத்தியமானது என்றும் இல்லையேல் அழிவிலேயே முடிந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அது எந்தளவுக்கு உண்மை என்பது ஒருபுறத்தில் இருக்க துரோகிகள் அழிப்பில் செலுத்தப்பட்ட கவனம் அப்போதைய அரச இயந்திரத்தின் மீது செலுத்தப்பட்டிருந்தால் அது போராட்டத்தின் திசையில் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கவும் கூடும்.

அதற்கான புறச்சூழல்கள் எந்தளவுக்குச் சாத்தியமாக இருந்தது என்ற கேள்விகளை இங்கு புறக்கணிக்கவில்லை.

அதுபோலவே தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு இடையிலான மோதல்கள் தமிழ் மக்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதை ஒருபோதும் மறந்து விட முடியாது.

விடுதலைப் புலிகளே எல்லா அமைப்புகளையும் தடை செய்து அழிக்க முனைந்ததாக முன்வைக்கப்படம் வாதங்கள் உள்ளன. ஆனால் ஏனைய இயக்கங்கள் அவ்வாறு செயற்பட முன்னர் புலிகள் முந்திக் கொண்டார்கள் என்றும் ஒரு கருத்தும் இருக்கிறது.

புலிகளால் தடை செய்யப்பட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அதற்குப் பின்னர் புலிகளை எதிர்ப்பது என்ற பேரில் அரச படையினருடனும் இந்தியப் படையினருடனும் இணைந்து செய்தவை எவற்றையும் ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது.

யாருக்கு எதிராகப் போராட்டங்களை ஆரம்பித்தார்களோ அவர்களுடன் இணைந்து செயற்பட்டதையும் ஆயுதமேந்தி சண்டையிட்டதையும் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்ததையும் வரலாறு ஒருபோதும் மறந்து விடாது.

அதனால் தான் இன்றைய அரசியலில் உள்ளவர்களில் எத்தனை பேருக்கு துரோகி என்று இன்னொருவரை அடையாளப்படுத்தும் அருகதை உள்ளது என்ற கேள்வி இருக்கிறது.

அரசியல் பரப்பில் வெற்றுக் கோசங்களுடன் அரசியல் செய்பவர்களுக்கு துரோகி என்று இன்னொருவரை அடையாளப்படுத்தி அரசியல் செய்வது இலகுவானதாக இருக்கிறது.

ஏனென்றால் அப்போது துரோகி என்று சுட்டும் போது அவரிடம் போய் யாரும் அதற்கான சான்றுகளையோ ஆதாரங்களையோ கேட்கப் போவதில்லை. அவ்வாறு கேட்டுவிட்டாலும் கேட்டவரும் கூட துரோகியாக அடையளப்படுத்தப்பட்டு விடுவார். அவரது ஆள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவார்.

ஆயுதப் போராட்டம் முடிந்து விட்ட நிலையில் இனிமேலாவது தமிழ் அரசியல் கட்சிகள் ஆரோக்கியமான அரசியலுக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். அது முக்கியமானதும் அவசியமானதும் கூட.

துரோகிகள் என்று அடையாளப்படுத்தும் அரசியலை விட்டு ஆரோக்கியமான முறையில் தர்க்கபூர்வமான விவாதங்களை நடத்த வேண்டும். கொள்கைகளையும் திடம்டங்களையும் முன்வைத்தும் தீமைகளை மறுத்து நிராகரித்தும் ஆரோக்கியமான ஓர் அரசியல் கலாசாரத்துக்குள் நுழைய வேண்டும்.

காழ்ப்புணர்வு அரசியல் தனிப்பட்ட விரோதம் தனிப்பட்ட விமர்சனங்களைத் தாண்டிய ஓர் அரசியல் முன்னெடுப்பே இன்று தமிழர் அரசியலில் தேவைப்படுகிறது.

தமிழர் அரசியலில் ஒற்றுமை என்பது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழர்கள் கடைசியாக ஒன்றுபட்டிருந்த காலம் என்று வரலாற்றுப் பதிவாகும் போலத் தோன்றுகிறது.

கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் இன்னொரு ஒன்றுபட்ட தலைமைத்துவம் இனிமேல் உருவாகும் அறிகுறிகளைக் காணவில்லை.

தலைமைகளுக்கிடையில் தோன்றியுள்ள ஈகோ தமிழரின் ஒன்றுபட்ட வலிமையை இனி உலகுக்கு உணர்த்தும் வாயப்பை இல்லாமல் செய்து விடும் போலவே தெரிகிறது.

இப்படியான சூழலில் தமிழ் தேசிய அரசியலில் கொஞ்சமாவது நாகரிகத்துடன் மாற்றுக் கருத்துக்களை தர்க்க பூர்வமாகவும் நியாயமாகவும் அணுகுகின்ற பக்குவம் வளர்க்கப்பட வேண்டும்.

இன்றைய அரசியல் களத்தில் நடக்கின்ற சேறடிப்புகள் முகம் சுழிக்க வைப்பவையாக இருக்கின்றன.

தமிழ் தேசிய கோசத்துடன் இயங்கும் கட்சிகளும் தலைவர்களும் கூட ஒருவருக்கொருவர் நேரடியாகச் சந்திக்கவோ பேசவோ முடியாத அளவுக்கு வெறுப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனிப்பட்ட அரசியல் காழ்ப்புகளும் வெறுப்புகளும் பெருகியுள்ளதே இதற்குக் காரணம். இதனைக் கடந்த ஓர் அரசியல் தமிழ் அரசியல் பரப்பில் தேவை.

எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை தமிழ் அரசியல் தலைமைகள் சிங்கள அரசியல் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டி இருப்பதையிட்டு வெட்கப்பட வேண்டும்.

மகிந்தவும், மைத்திரியும், ரணிலும் தமது அரசியல் மேடைகளில் தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்தாலும் பொது அரங்கில் அவ்வாறு நடந்து கொள்வதில்லை.

ஒருவரையொருவர் மதிக்கின்ற புன்னகையுடன் பேசுகின்ற நாகரிகம் அவர்களிடம் உள்ளது.

ஆனால் தமிழ் அரசியல் பரப்பில் அவ்வாறு கொள்கை அரசியலைக் கடந்த மனிதத்துவ பண்புகளைக் காண்பது அரிது. இன்னமும் எதிரிகள் துரோகிகள் என்ற இரட்டைக் குறியுடன் தான் அரசியலை நகர்த்துகின்றனர்.

அரசியல் என்பது சூட்சுமங்கள் நிறைந்த ஒரு வழிமுறை. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்கவும் அழ வேண்டிய இடத்தில் அழவும் கோப்பட வேண்டிய இடத்தில் கோபப்படவும் தெரிந்தவர்களுக்குத் தான் அது சரிப்பட்டு வரும். எல்லா இடங்களிலும் கோபம் கொப்பளிக்க நிற்பவர்களுக்கு அது ஏற்புடைய களம் அல்ல.

தமிழ் அரசியல் பரப்பில் விரோத அரசியலும் துரோக அரசியலும் தான் முதன்மைப்படுத்துகிறதே தவிர ஆரோக்கியமான ஜனநாயக அரசியல் பாரம்பரியம் ஒன்றை உருவாக்குவது பற்றி முதிய தலைமைகளும் சிந்திக்கவில்லை. இளைய தலைமைகளும் சிந்திக்கவில்லை.

மாற்றம் பற்றிச் சிந்திக்கிறவர்கள் மாற்றுத் தலைமை பற்றிச் சிந்திக்கிறவர்கள் தமது அரசியல் அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதைச் சிந்திக்கவில்லை.

தமிழ் அரசியல் பரப்பில் போட்டியைப் போலவே தனித்துவமான ஜனநாயகப் பண்புகளும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அது படைய கோட்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் அரசவியலைப் புதிய கோணத்தில் முன்னெடுப்பதற்கான வழிகளைத் தோற்றுவிக்கக் கூடும்.

அத்தகையதொரு மாற்றத்துக்குத் தமிழ் அரசியல் பரப்பை நகர்த்திச் செல்வதற்கு இன்றுள்ள எத்தனை தலைமைகள் தயாராக இருக்கின்றன.