புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளால் கோத்தபாய கலக்கத்தில்?

Report Print Steephen Steephen in அரசியல்

சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த செய்திகளை கேள்விப்பட்ட, தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அடுத்ததாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவை, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார,முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி ஆகியோரை கைது செய்ய உள்ளனர். இவர்கள் வெளிநாடு செல்லவும் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இவர்களை தவிர மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தவுள்ளனர். லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படும் போது, இவர் கொழும்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக கடமையாற்றினார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் இவ்வாறு பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணைகளை நடத்த தயாராகி வரும் நிலையில், கோத்தபாய ராஜபக்சவும் அவரது “எளிய” அமைப்பினரும் மிகவும் கலக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த மிக் தாக்குதல் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் பாரிய ஊழல் நடந்ததுள்ளது. இது தொடர்பான கட்டுரைகளை சன்டே லீடர் பத்திரிகையில் எழுதி வந்ததன் காரணமாகவே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழலில் கோத்தபாய ராஜபக்ச, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க உட்பட சிலருக்கு தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த ஊழலில் பெற்றுக்கொண்ட பணம், ஹொங்கொங்கில் உள்ள வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார். கோத்தபாய ராஜபக்சவின் இந்த வங்கிக் கணக்கில் மூன்று இந்தியர்கள் பணத்தை வைப்புச் செய்ததாக ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.