கூட்டமைப்பு எம்.பிக்களின் உறவினர்களை பணயக் கைதிகளாக வைத்த கருணா

Report Print Navoj in அரசியல்

அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களித்த த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை பணயக் கைதிகளாக வைத்த கருணா, இராணுவப்படை ஆதரவளிக்க வேண்டும் என்று கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம், கௌரவமே தவிர இந்த அரசாங்கம் எங்களுக்கு பிச்சை போடவில்லை.

51 உறுப்பினர்களுடன் மகிந்த எதிர்க்கட்சி என்று சொல்லுகின்ற நிலையில், நாம் எதிர்க்கட்சி தலைவருடன் இருக்கின்ற காரணத்தால், எமது மக்கள் பலத்தை வழங்கிய காரணத்தால் இந்த பதவி கிடைத்துள்ளதே தவிர அரசாங்கத்துடன் சரணாகதியாவதற்கான சன்மானம் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் இருந்துதான் வித்திடப்பட்டது. ஊடகவியலாளர் சிவராம் உட்பட பல ஊடகவியலாளர் சேர்ந்து உருவாவதற்கு முனைந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் பரிந்துரையோடு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தின் மூலம் கிடைத்தது.

எமது தலைவர் சம்பந்தன் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுகின்ற வாய்ப்பை உருவாக்கியவர். சூரியன் சின்னத்தை முடக்கியவர்.

ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் முடக்கப்பட்டது. அதன் பிற்பாடு தலைவர் பிரபாகரனால் வீட்டுச் சின்னத்தினை தெரிவு செய்து வழங்கினார்கள்.

அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களித்த விடுதலை அமைப்பு என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எதிர்த்து வாக்களித்த போது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை பணயக் கைதிகளாக வைத்த கருணா, இராணுவப்படை ஆதரவளிக்க வேண்டும் என்று சொன்னார்.

இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிபணியாமல் எதிர்த்து வாக்களித்தார்கள் என்பதுதான் வரலாறு. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஆனால் நாங்கள் ஒருகாலமும் அஞ்சவில்லை. அடுத்த உயிர் எடுத்தாலும் பரவாயில்லை மக்களின் இறையாண்மையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இன்றுவரை செயற்படுகின்றோம்.

எமது மக்களின் இறையாண்மை மற்றும் விடுதலையை விற்று ஒரு காலமும் அரசாங்கத்தோடு சோரம் போக முடியாது. இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான கட்சியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.