கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கான தந்திரம்!

Report Print Habil in அரசியல்

இந்தவார இறுதியில் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி அளவுக்கு அதிகமாக எதிர்பார்பபைக் கொண்டதாக மாறியிருக்கிறது.

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள், அவற்றின் அபிவிருத்தி சார்ந்த திட்டங்கள் மட்டுமே பெரும்பாலும் முதன்மைப்படுத்தப்பட்டு வந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான முதல் வெற்றியைச் சுவைக்கும் ஆர்வத்தில் இருக்கின்ற மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணி தமது இரண்டு எதிரிகளான ஐதேக வையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் வீழ்த்துவதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்த முனைகிறது.

அதற்காக அரசியலமைப்பு மாற்றத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை தனிநாட்டை உருவாக்கும் தமிழீழத்துக்கு நிகரானது என்று கூறாத குறையாக பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது.

சமஷ்டியை வழங்கப் போகிறது, நாட்டைக் கூறுபொடப் போகிறது என்று இடைக்கால அறிக்கைக்கு எதிராக மகிந்த அணி விமர்சனங்களைச் செய்து வருகிறது.

இடைக்கால அறிக்கையின் பங்காளிகளாக இருப்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேக வும் இதனை முன்வைத்து மோதிக் கொள்ளாமல் இருக்கின்றன.

அதேவேளை இந்த இடைக்கால அறிக்கையை ஆதரித்தும் ஆதரிக்காதது போன்றும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் அதனைத் தோற்கடிக்கவும் கங்கணம் கட்டியுள்ள இரண்டு முக்கிய தரப்புகள் வடக்கில் இருக்கின்றன.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எவ் கூட்டணியுமே அவை.

உள்ளூராட்சித் தேர்தலில் எப்படியாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்தி அந்த முதன்மை இடத்தைத் தாம் பிடித்து விட வேண்டும் என்பது இந்த இரண்டு அணிகளினதும் பிரதான குறி. அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளியானதும் அதனை இந்த இரண்டு தரப்புகளும் அடியோடு நிராகரித்திருந்தன.

இது ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் அரசிலமைப்பாக இருக்கும் என்பதாலும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் இருக்கவில்லை என்பதாலும் இந்த இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக இந்தத் தரப்புகள் கூறியிருந்தன.

எனவே உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்களின் போது இடைக்கால அறிக்கையை விளாசுவதற்கு இந்தக் கட்சிகள் தயங்கவில்லை. அது இடைக்கால அறிக்கையைப் பாதிக்கும் என்பதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இவர்களின் இலக்கு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடைக்கால அறிக்கைக்குச் சாதமான கருத்துக்களை சுமந்திரன் மாத்திரம் வெளியிட்டு வருகிறார்.

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு உறுப்பினராக இடைக்கால அறிக்கையை உருவாக்கும் குழுவில் இருந்தவர் என்பதால் அதிலுள்ள சாதகமான விடயங்களை தேர்தல் பிரசாரங்களின் போது அவர் நியாயப்படுத்தி வருகிறார்.

அதேவேளை இரா.சம்பந்தனோ ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ இடைக்கால அறிக்கையை மையப்படுத்தி அதனை ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளவில்லை.

நியாயமான தீர்வு அரசிலமைப்பு மாற்றத்தின் மூலம் விரைவாக கிட்ட வேண்டும் என்பதையும் அத்தகைய தீர்வு ஒன்று கிடைக்காமல் போவதற்கு கூட்டமைப்பு காரணமாக இருந்து விடக் கூடாது என்பதையுமே அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது வெளியிட்ப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் அடிப்படையிலான ஒரு அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகங்களுக்கு அப்பால் அத்தகைய முயற்சிகளைத் தோற்கடித்த தரப்பாக தாம் அடையாளப்படுத்தப்பட்டு விடக் கூடாது என்ற கருத்தே சம்பந்தன் போன்றவர்களிடம் காணப்படுகிறது.

தேர்தல் மேடைகளில் சம்பந்தனோ அல்லது வேறு எந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோ தமது அரசியல் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்களே தவிர புதிய அரசியலமைப்பின் ஊடாக நியாயமான தீர்வு கிடைக்கும் என்றோ அது எப்போது நிறைவேறும் என்றோ வாக்குறுதிகளை கொடுக்கவில்லை.

தற்போதைய அரசியல் சூழலில் என்ன நடக்கும் என்றே கூற முடியாத நிலையில் மீண்டும் சம்பந்தன் 2016,2017 என்று கொடுத்தது போல அரசியல் தீர்வுக்கு இன்னொரு காலக்கெடுவை வெளிப்படுத்த தயாராக இல்லை.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அதிகம் கேள்விக்குறியான விடயமாக மாறியிருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. கூட்டு அரசாங்கத்துக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகள் முதலாவது காரணம். புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைபு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப் படுமா என்பது இரண்டாவது காரணம்.

இடைக்கால அறிக்கை தான் இறுதியான வரைபு என்பது போல கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் தேர்தல் மேடைகளிலும் பிரசார அரங்குகளிலும் கூறிக் கொண்டிருப்பது உண்மையல்ல.

இடைக்கால அறிக்கை தனியே பொது முன்மொழிவுகளை மாத்திரம் உள்ளடக்கியிருக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளின் தனிப்பட்ட கருத்துக்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

வழிநடத்தல் குழுவில் பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படாததால் தான் இவ்வாறு தனித்தனியான யோசனைகளை பின்னிணைப்பாக வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறான பின் இணைப்புடன் ஒவ்வொரு கட்சியினதும் கருத்துக்களையும் இணைத்து ஒரு அரசியலமைப்பை உருவாக்கி விட முடியாது. ஏதாவதொரு தரப்பு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரப்புகள் தமது நிலைப்பாடுகளில் இருந்து கீழிறங்கி விட்டுக்கொடுத்தால் தான் அது சாத்தியமாகும்.

அவ்வாறு விட்டுக்கொடுக்கக் கூடிய நிலையில் அரசியல் களத்தில் எந்தத் தரப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அத்தகையதொரு விட்டுக்கொடுப்பைச் செய்ய முடியாது. ஏனென்றால் அது கூட்டமைப்பின் அரசியல் தற்கொலைக்குச் சமமானது.

கூட்டமைப்பைத் தோற்கடிக்க நினைக்கும் தரப்புகள் கூறுவது போல கூட்டமைப்பினால் அவ்வளவு இலகுவாக தமது அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து விலகவோ விட்டுக்கொடுக்கவோ முடியாது.

இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக ஒரு கருத்தை வலியுறுத்தி வருகின்றதை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவர் அடிக்கடி கூறி வருகிறார்.

அதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்புக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அடிப்படை அரசியல் அபிலாஷைகள் விடயத்தில் விட்டுக்கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இப்படியான நிலையில் புதிய அரசியலமைப்பொன்றை குறுகிய காலஅவகாசத்துக்குள் எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்வி இருக்கிறது.

இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்பட்டவாறு கூட அரசியலமைப்பின் இறுதி வரைபு வரப்போவதில்லை அதனை விடவும் பலவீனமான ஒன்றாகத்தான் அது இருக்கப் போகிறது.

இடைக்கால அறிக்கையில் பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும் அவை போதுமானதல்ல என்ற கருத்தைக் கொண்டுள்ள கூட்டமைப்பு எவ்வாறு அதனை விடவும் பலவீனமான ஒரு அரசியலமைப்புக்கு இணங்கும்?

அரசியல் அரங்கில் கட்சிகளின் விமர்சனங்கள் மறுதரப்பை வீழ்த்துவதற்கானதாகவே இருக்கும். அத்தகைய விமர்சனங்களுக்கு ஆதாரங்களோ வலுவான தர்க்கங்களோ தேவையில்லை.

அவ்வாறு தான் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு கூட்டமைப்பு கைதூக்கப் போகிறது. அவர்கள் விலைபோய் விட்டனர் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் நிச்சயமாக கூட்டமைப்பு அவ்வாறு ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஒருபோதும் ஆதரிக்க முன்வராது.

ஏனென்றால் கூட்டமைப்பின் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் சுமந்திரன் போன்றவர்கள் அல்ல. இங்கு சுமந்திரன் போல அல்ல என்ற கருத்து அவர் கனடாவில் கூறியுள்ள கருத்தின் அடிப்படையிலானது.

புதிய அரசியலமைப்பு முயற்சிகள் வெற்றி பெற்றால் தீர்வைப் பெற்ற திருப்தியுடனும் முடியாது போனால் அதற்குப் பொறுப்பேற்றும் அரசியலில் இருந்து விலகலாம் என்று எண்ணியுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் அவரைப் போன்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் வாழ்வின் முடிவைப் பற்றி எண்ணுபவர்களல்ல. அவர்களுக்கு தொடர்ச்சியான அரசியல் பயணம் தேவைப்படுகிறது. இரா.சம்பந்தனுக்கும் கூட அது விதிவிலக்கல்ல. அதனை சுமந்திரனே கூறியிருக்கிறார்.

எனவே ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு கை தூக்குவது தமது அரசியல் பயணத்தை தொடர்வதற்கு நிச்சயமாக சாவுமணி அடித்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். தெரிந்து கொண்டே எவரும் போய் படுகுழியில் விழமாட்டார்கள்.

அடுத்து கூட்டமைப்பில் இப்போதுள்ள சிவசக்தி ஆனந்தன் தவிர 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாத புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்தாலும் கூட எல்லாம் முடிந்து விடும் என்று அர்த்தமில்லை.

அந்த அரசியலமைப்பைத் தோற்கடிப்பதற்கான பலம் தமிழ் மக்களிடம் இருக்கும். அதாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது. அதற்கு கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.

அத்தகைய வாக்கெடுப்பின் போது தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியம். தமிழ் மக்கள் அதனை நிராகரித்து வாக்களித்தால் அந்தக் கருத்து வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்பைத் தோற்கடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஏனென்றால் இந்த விடயத்தில் சிங்கள மக்கள் தெளிவாகப் பிளவுபட்டு நிற்கிறார்கள். எனவே தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குள் கடந்த ஜனாதிபதி தேர்தலைப் போன்று மிக முக்கியமானைவையாக இருக்கும்.

அத்தகையதொரு வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றாத அரசியலமைப்பு என்று வெளிப்படுத்தும் வாயப்பு உள்ளது.

தமிழ்ப் பகுதிகளில் மாத்திரம் அது ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும் போது தமிழர்கள் அதனை ஏற்கவில்லை என்பது உலகத்துக்குப் புரியும்.

கூட்டமைப்பு சொன்னபடியெல்லாம் தமிழ் மக்கள் வாக்களித்து வந்தவர்கள் அல்ல. 2010 ஜனாதிபதி தேர்தலின் போது பேரழிவுகளை ஏற்படுத்திய இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு கூட்டமைப்பு கேட்ட போது அதனை செய்யவில்லை.

அதுபோலவே புதிய அரசியலமைப்பு கருத்து வாக்கெடுப்புக்கு வரும் போதும் தமிழ் மக்கள் அதனை நிராகரிப்பதற்கு போதிய சந்தர்ப்பம் கிட்டும்.

அந்த வாயப்புகளைப் பற்றிப் பேசாமல் உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் புதிய அரசியலமைப்பு நிறைவேறி விடும் என்பது போல பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

அரசியல் என்பது தந்திரங்களால் ஆனது. அந்த வகையில் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கான தந்திரமாக இடைக்கால அறிக்கை மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.