புலிகளின் வெற்றிக்கு உரிமை கொண்டாட கூட்டமைப்புக்கு தகுதி இல்லை

Report Print Kumar in அரசியல்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அது தொடர்பான ஆதாரங்களை வெளியிடவேண்டும். இல்லை என்றால் இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பணியாற்றிய பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் பங்குள்ளது என்ற வகையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு காணியினை வழங்கியது பிள்ளையான் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

2006ஆம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆரம்பிக்கப்படவில்லை. அக்கட்சியானது 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்பட்டது. அதுவரையில் எந்த விதமான செயற்பாடுகளையும் எமது கட்சி செய்யவில்லை.

அக்காலத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

போலியான பிரசாரங்களுக்கு எதிராக நாம் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றோம். அண்மையில் கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர்

பிரசன்னா தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை கோத்தபாய தான் ஆரம்பித்து வைத்ததாகவும் நாங்கள் ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டதாகவும் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.

கோத்தபாய எங்களுடைய கட்சியை ஆரம்பித்து வைக்கவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கவில்லை. கோத்தபாய அமைச்சராக இருக்கவில்லை. அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர். கட்சி பதிவு செய்வதற்கும் கோத்தபாயவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? எங்களது கட்சியை ஒட்டுக்குழுவாக இவர்கள் பிரசாரம் செய்துவருகினற்னர்.

எங்களுடைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அரசியல் ரீதியாக ஆயுதம் தூக்கி போராடவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்.

அந்த வேளையில் எமது கட்சியின் தலைவர் பிள்ளையான் உட்பட எமது கட்சியில் இருந்த பல தளபதிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆயுதம் தூக்கி போராடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தனர்.

2004ஆம் ஆண்டுவரையில் விடுதலைப்புலிகள் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளிலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களின் பங்களிப்பு உள்ளது. இந்த வெற்றிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிமை கொண்டாட முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் யாரும் அன்று விடுதலைப்புலிகளை ஆதரிக்கவும் இல்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதற்காக அரசாங்கத்துடனும் அரச படையினருடனும் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு உணவு கொடுத்தவர்கள், ஆதரவு வழங்கியவர்கள், விறகுவெட்டி வருபர்வகளை சுட்டுக்கொன்றவர்கள் எல்லாம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மீது சேருபூசுவதற்கு அருகதையற்றவர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.