போர்க் குற்றங்களை மறந்து விடுங்கள்- வடக்கு ஆளுநர்

Report Print Samy in அரசியல்

போரின் போது இடம்பெற்ற குற்றங்களை அனைவரும் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தினார்.

அத்துடன், ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி வருவதில்லை‘ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளையும் அவர் நினைவுபடுத்தினார்.

அநுராதபுரதம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் உறவினர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட எழுத்தாணை மனுவை அடுத்தே இந்த தீர்மானத்தை சட்டமா அதிபர் அறிவித்தார்.

இந்த நிலையில் அரசியல் கைதிகள் மூவரது உறவினர்களும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்றுச் சந்தித்து, ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:

போராட்டம் நடத்திய காரணத்தால் நானும் மறியலில் இருந்தேன். தற்போது போராட்டங்கள், போர் என்பன முடிந்து விட்டன. அந்தக் காலத்தில் நடைபெற்றவைகளை எல்லாம் நாம் மறக்க வேண்டும். அவற்றை நெஞ்சில் வைத்துக்கொண்டு கோபத்தில் செய்பவைகளால் எந்தப் பயனுமில்லை.

இந்த நாட்டில் இடம்பெற்ற போரால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் கடுமையாக வேதனையடைந்தனர். இப்போது எல்லா மக்களும் ஒரு தாய் பிள்ளைகளாக இந்தத் தேசத்துக்கு விடுதலை கொண்டு வர வேண்டும்.

இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் 70 ஆண்டுகள் என்ன நடந்தது? முஸ்லிம் தலைவர்கள் அரசுடன் இணைந்து தமது மக்களுக்காக வேலை செய்தனர். தமிழ் மக்கள் 70 ஆண்டுகள் அரசுக்கு எதிராக இருந்தனர்.

போராட்டம் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அரசியல் நோக்கத்துக்கு அதனைச் செய்வோம்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது இருந்தால் அவற்றை உடனடியாக நேரடியாகச் செய்ய வேண்டும். அதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்றார்.

யாழில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்!!

- Uthayan