லஞ்ச ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் குடிமகன்!

Report Print Samy in அரசியல்

காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தை அடைந்து 70வது வருடத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் எமது நாட்டு மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெற்றிருக்கின்றார்களா என்ற கேள்வி எம்முன் எழுகின்றது.

முன்னோக்கி கொண்டு செல்வதற்குப் பதிலாக திட்டமிட்டே இன, மத ரீதியில் பிளவுபடுத்தப்பட்டு அதன் அடிப்படையில் இன மற்றும் மத மோதல்கள் ஏற்படுத்தப்பட்டு பின்னோக்கித் தள்ளப்பட்டு வந்த ஒரு நாடு என்ற வகையிலேயே எமது நாடு இந்தச் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

குறிப்பாக அரசியலில் நேர்மையற்ற தன்மை, ஒருபுறத்தில் இன ஒற்றுமைக்குப் பதிலாக இனவாதத்தை வளர்த்து வந்த அதே சமயம் மறுபுறத்தில் நம்நாட்டு அரசியலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் லஞ்சமும் ஊழலும் நமது நாட்டை வெகுவாகப் பின்னோக்கித் தள்ளியிருக்கிறது.

நாட்டை ஆண்ட தரப்பினரும் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் தரப்பினரும் என இரு தரப்பினராலும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட லஞச, ஊழல்கள் பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுதல் ஆகியன ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில், அவற்றுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன எனும் ஒரு தனி மனிதரே போர்க்கொடியை ஏந்தி நிற்கும் நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

இருப்பினும் இன்று நம்நாட்டில் லஞ்ச ஊழலுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தியிருக்கும் இந்தக் குடிமகன் சாதாரண குடிமகன் அன்று. நம்நாட்டின் முதன்மை குடிமகனாவார்.

அந்த வகையில் பல தசாப்தங்களாக நமது நாட்டையும் நாட்டு மக்களையும் படுபாதாளத்தில் தள்ளிவரும் அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழல் எனும் சதிவலையிலிருந்து நமது நாட்டை மீட்டெடுக்கும் பொன்னான வாய்ப்பு நாட்டின் முதன்மை குடிமகனான மைத்திரிபால சிறிசேனவுக்கு கிட்டியிருக்கின்றது.

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையிலும் சொந்த வாழ்க்கையில் லஞ்சம் ஊழல்களில் ஈடுபட்டதாக இதுவரை எவராலும் குற்றம் சாட்டப்பட்டோ நிரூபிக்கப்பட்டோ இல்லாத பின்னணியில் லஞ்சம் ஊழலுக்கு எதிராக தம்மையே முன்னிறுத்திப் போராடக்கூடிய அரிய வாயப்பு அவருக்கு கிடைத்திருக்கின்றது.

அதனாலேயே மத்திய வங்கி பிணைமுறி மோசடி மீதான பிற்போடப்பட்ட பாராளுமன்ற விவாதத்தினை தேர்தலுக்கு முன்னரே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினை அவரால் ஏற்படுத்த முடிந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதற்கு அமைய பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட வி.ஐ.பி திருடர்கள் ஒன்றுகூடி தேர்தலுக்குப் பின்னர் இந்த மோசடி பற்றிய விவாதத்தை முன்னெடுக்க இரகசியத் திட்டம் தீட்டியிருக்கின்றனர்.

அதனை அறியக் கிடைத்ததனாலேயே ஜனாதிபதி இந்த விவாதத்தை தேர்தலுக்கு முன்னர் நடத்துமாறு சவால் விட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டம் மக்களின் மகத்தான கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

மறுபுறத்தில் இந்த லஞ்ச ஊழல் எதிர்ப்புக் குரல் வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடாது செயல்வடிவம் பெற்று வஞ்சகர்களைத் தண்டிக்கின்ற உண்மையான செயற்திட்டமாக அமைய வேண்டும் என்ற அழுத்தமும் மக்கள் மத்தியிலிருந்து எழத்தொடங்கியுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி, நமது நாடு ஆற்றல் மிக்கவர்களையும் அறிவாளிகளையும் எத்தனையோ முக்கியமான இயற்கை வளங்களையும் கொண்டிருந்த போதும் அவற்றால் நம்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்கப் பெறாதிருப்பதற்கு, வெறுங்கையுடன் அரசியலுக்கு வந்து வகைதொகையற்ற விதத்தில் மக்களின் சொத்தை சூறையாடும் திருட்டு அரசியல்வாதி களேயாகும். இவர்களாலேயே நாட்டை முன்னேற்ற முடியாமல் இருக்கின்றது என மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி சிறிசேன முன்வைத்திருக்கும் இந்தக் கருத்து இதுவரை எமது நாட்டில் எந்தவொரு அரசியல் தலைவர்களினாலும் முன்வைக்கப்படவில்லை என்றே கூறலாம்.

உண்மையான திருடர்கள் யார்? எந்தளவு பணத்தை அவர்கள் திருடியிருக்கி்னறார்கள்? அவற்றுள் எந்தளவு பணத்தையும் சொத்துக்களையும் மீளப்பெற்று அவற்றை அரசுடமையாக்கி பாதிப்புகளை ஈடுசெய்ய முடியும் என்பதை நாட்டு மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பல தசாப்தங்களாக அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளுக்கு அடிப்படைக் காரணமாக இருந்து வந்த விருப்பு வாக்கு முறைமையினை இந்த நாட்டு அரசியலிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக எத்தனையோ தலைவர்கள் உறுதியளித்து வந்த போதிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அர்ப்பணிப்பு காரணமாக விருப்பு வாக்கு தேர்தல் முறைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்க முடிந்திருக்கின்றது.

அத்துடன் தேர்தல் பிரசாரங்களில் சூழலுக்கு உச்சக்கட்ட அழிவை ஏற்படுத்தி வந்த பொலித்தீன் சோடனைகளும் இம்முறை தேர்தலில் கைவிடப்பட்டிருப்பதனாலேயே இலங்கை தேர்தல் வரலாற்றில் ஆகக்குறைந்த தேர்தல் வன்முறைகள் பதிவாகியிருக்கும் தேர்தலாக அமைந்திருக்கின்றது.

அந்த வகையில் இதுவரை நம்நாட்டு அரசியலை அசிங்கப்படுத்தி க் கொண்டிருந்த விருப்பு வாக்கு வேட்டை, பொலித்தீன் சோடனை ஆகியவற்றுக்கு முடிவு கட்டி மகாத்மா அரசியலுக்கு வழிவகுத்துக் கொடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே லஞ்ச ஊழல் எனும் படுகுழியில் விழுந்திருக்கும் எமது நாடடை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இந்நாட்டு மக்களின் எஞ்சியுள்ள எதிர்பார்ப்பாக இருக்கிறது