இரண்டு கோடி ரூபாய்க்காக அரசாங்கத்திடம் கையேந்திவிட்டனர்!

Report Print Kumar in அரசியல்

தமிழ் மக்களை ஏமாற்றி வாக்கு கேட்பவர்களை, தமிழ் மக்கள் நிராகரிக்கப் போகின்றார்கள் என்பதை எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிரூபிக்கப்போகின்றது என வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் தீர்வொன்றை தாம் நெருங்கிக்கொண்டிருப்பதாகவும், தமிழ் மக்கள் இந்த தேர்தலில் தமக்கு வாக்களிக்கவில்லையாயின் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு ஆரம்பத்தையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. சம்பந்தன் ஐயா 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது 2016ஆம் ஆண்டிற்குள் தீர்வு கிடைத்துவிடும் என்றார்.

பின்னர் 2017ஆம் தீர்வு கிடைத்துவிடும் என்றார். தற்போது 2018ஆம் ஆண்டிற்குள் தீர்வு கிடைத்துவிடும் என்கின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அரசியல் தீர்வு கிடைத்துவிடும் என்கின்றார்.

அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதைவைத்து தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

சைக்கிள் மற்றும் சூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் இடைக்கால அறிக்கை என்னும் பெயரில் பிழையானதொரு அரசியல் தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவர முனைவதாக பிரசாரம் செய்கின்றனர்.

இடைக்கால அறிக்கையின் மூலம் சமஷ்டி அரசியல் தீர்வையே கொண்டுவந்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரசாரம் செய்கின்றது.

அரசியல் தீர்வை உருவாக்குவது தொடர்பான நாடாளுமன்ற குழுவில் இருந்த சித்தார்த்தன் அரசியல் தீர்வுக்கான சாத்தியமே இல்லை என்கின்றார்.

இடைக்கால அறிக்கை என்பது பல்வேறு கட்சிகளினுடைய கருத்துக்களின் தொகுப்பு அறிக்கையாகும். அது அரசியல் தீர்வுக்கான எந்தவொரு அடிப்படையையும் கொண்டதல்ல. அது அரசாங்கத்தின் வாக்குறுதியும் அல்ல.

கடந்த வரவு செலவு திட்டத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கோடி ரூபா வழங்கப்பட்டதாக சிவசக்தி ஆனந்தன் கூறியிருக்கின்றார்.

அது லஞ்சமாக வழங்கப்பட்ட பணம் அல்ல எனவும், விஷேட அபிவிருத்திக்காக வழங்கப்பட்டதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இரண்டுகோடி ரூபா வழங்கப்பட்ட விவகாரம் வெளிவந்துள்ளது.

கடந்த வருடமும் அதற்கு முன்னைய வருடமும் அரசாங்கம் தந்த பணத்திற்கு கணக்குச்சொல்லுங்கள் என சிவசக்தி ஆனந்தனை பார்த்து சுமந்திரன் கேட்கின்றார்.

இதன்மூலம் சூரியன் கட்சிக்காரர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒன்றாக சேர்ந்திருந்தபோதும் அரசாங்கத்திடமிருந்து பணத்தினை வாங்கியிருக்கின்ற உண்மை வெளிப்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே தாம் போராடிவருவதாகவும், சலுகைகளுக்காக நாம் விலைபோகமாட்டோம் என்று கூறியவர்கள் இன்று இரண்டு கோடி ரூபாய்க்காக அரசாங்கத்திடம் கையேந்தியுள்ளனர். அதுவே உண்மையாகும்.

கோயில்களுக்கு ஒலி பெருக்கி வாங்கி கொடுப்பதோ, விளையாட்டு கழகங்களுக்கு துடுப்பு மட்டையும் பந்தும் வாங்கி கொடுப்பதோ அல்லது சனசமூக நிலையங்களுக்கு பிளாஸ்டிக் கதிரைகள் வாங்கிக்கொடுப்பதோ அபிவிருத்தியல்ல.

அவை தேர்தலுக்காக வழங்கப்படும் லஞ்சமாகும். இந்நடவடிக்கை தமிழ்நாட்டு அரசியலைப்போன்றதாக இருக்கின்றது. யுத்தத்தில் பல இழப்புகளை சந்தித்த தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் இவ்வாறான லஞ்சங்களை கொடுத்து வாக்குகளை கேட்கின்ற நிலைமை இன்று காணப்படுகின்றது.

இவை தேர்தல் சட்டதிட்டங்களுக்கு முரணான விடயமாகும். இப்போதிருப்பது தமிழரசுக்கட்சியல்ல. ஐக்கிய தேசிய தமிழரசுக் கட்சியாகும். இவர்கள் ஏமாற்று அரசியலை செய்துவருகின்றனர்.

தமிழ் மக்கள் வாக்குகளை மாற்றிப்போடுவதால் மகிந்த ராஜபக்ச மீண்டும் வந்துவிடுவாரென இரா.சம்பந்தன் சொல்கின்றார். தெற்கில் வேண்டுமானால் இதைக் கூறலாம்.

தமிழ் மக்களை ஏமாற்றி வாக்கு வேண்டுபவர்களை தமிழ் மக்கள் நிராகரிப்பதை வடக்கு கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தல் நிரூபிக்கப்போகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.