மோசடியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்! ஹர்ச டி சில்வா

Report Print Aasim in அரசியல்

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் மோசடியாளர்களாக இனம் காணப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்று பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனை மோசடிகள் தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பளிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமையை பொருளாதார விவகாரங்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா வரவேற்றுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள அவர், பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 34 மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில் மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை வரவேற்கின்றேன்.

எனினும் பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

அவ்வாறான நபர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.