பிரசாந்தனுக்கு உயிர் பிச்சை வழங்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Report Print Navoj in அரசியல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தனின் உயிரை காப்பாற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் நேற்றைய தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மகிந்தவின் காலத்தில் பிள்ளையான் வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை சுருட்டுவதில் தான் கவனம் செலுத்தியிருந்தார்.

கிழக்கு மாகாண சபையில் இருந்து சுருட்டிய கணக்குகளை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றில் கணக்காய்வு பகுதிக்கு அறிக்கைகளை கோரி சமர்ப்பித்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாழைச்சேனையில் உயிரிழந்த போராளிகளின் உடலை கட்டி வீதிகளில் இழுத்து கொண்டு மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தனின் உயிரை காப்பாற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஆரையம்பதி பகுதியில் இராணுவத்தோடு இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தார் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டமையால் விடுதலைப் புலிகள் கொண்டு சென்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், தங்கேஸ்வரி ஆகியோர் அங்கு சென்று அவர்களுடன் வாதாடி இவரை காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள்.

இதேவேளை, இந்த விடயத்தினை பிரசாந்தன் நிகழ்வொன்றில் பேசினார். ஆனால், அந்த நன்றி கூட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு இருக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.