லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்ளுக்கு எதிராக சமிக்ஞையை வெளியிட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
“இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிராலயத்துக்கு முன்னால் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சிறு சமிக்ஞை ஒன்றை வழங்கினார். இதன் காரணமாக சிறு முரண்பாட்டு நிலைமையொன்று தோற்றம் பெற்றது.
இதையடுத்து, அவரை உடனடியாக நாட்டுக்கு மீள அழைக்குமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
எனினும், இதில் தலையிட்ட ஜனாதிபதி, அதை நிறுத்தி, அவர் அங்கேயே இருப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்.
இது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
புலி ஆதரவாளர்களுக்கு வழங்கிய சமிக்ஞைக்காக தற்போது தமது வாக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு என்று கூறியதுடன், அவருக்கு நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலி ஆதரவாளர்கள் தமது அமைப்புக்களுக்கு நிதி திரட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எவ்வித ஆதரவும் இல்லை என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அவ்வாறு சமிக்ஞை செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதற்காக அவருக்கு (பிரிகேடியருக்கு) தாம் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.