ஆட்சியமைப்பது தொடர்பில் த.தே.கூட்டமைப்புக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் இணக்கம்?

Report Print Sumi in அரசியல்

ஒற்றையாட்சிக்கு ஒத்துக்கொண்ட தலைமைகள் கூட்டமைப்பில் இருந்து அகற்றப்பட்டு, தனிப்பட்ட கட்சி வளர்க்கும் நோக்கமில்லாது தமிழ்த் தேசியத்தை வளர்க்கும் முகமான ஒரு தூய அரசியல் கலாச்சாரத்தை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப சம்மதிக்கும் வரை கூட்டமைப்புடன் எந்த இணக்கப்பாட்டுக்கும் வரமாட்டோம், கூட்டமைப்பில் இணையவும் மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்த சபைகளை சீராக நடத்த பூரண ஒத்துழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாக அறிய முடிகிறது.

ஆனால், ஒற்றையாட்சிக்கு ஒத்துக்கொண்ட தலைமைகள் கூட்டமைப்பில் இருந்து அகற்றப்பட்டு, தனிப்பட்ட கட்சி வளர்க்கும் நோக்கமில்லாது தமிழ்த் தேசியத்தை வளர்க்கும் முகமான ஒரு தூய அரசியல் கலாச்சாரத்தை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப சம்மதிக்கும் வரை கூட்டமைப்புடன் எந்த இணக்கப்பாட்டுக்கும் வரமாட்டோம், கூட்டமைப்பில் இணையவும் மாட்டோம்.

உள்ளூராட்சி சபைகளிலும் கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட மாட்டோம்.

ஆனால் எமது கட்சிக்கென்று ஒரு அரசியல் நாகரீகமுள்ளது. அதன்படி தேவையற்ற வகையில் கூட்டமைப்பின் தீர்மானங்களை குழப்ப மாட்டோம். குழப்ப நினைக்கும் சக்திகளுக்கு ஆதரவளிக்கவும் மாட்டோம்.

மக்கள் நலன்சார்ந்து கொண்டுவரும் திட்டங்களை ஆதரிப்போம் மக்கள் நலனுக்கு எதிரானவற்றை எதிர்ப்போம்.

அதேபோல் எமது உறுப்பினர்கள் கொண்டுவரும் நல்ல தீர்மானங்களையும் ஞாயமான முறையில், எமது கட்சி செயற்படுவது போல அரசியல் நாகரீகத்துடனும் மக்கள் நலனை கருத்தில் கொண்டும் கூட்டமைப்பினர் அங்கீகரித்துச் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கூடுதல் ஆசனங்களைப் பெற்றாலும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத சபைகளுக்கு எதிர் தரப்பில் போட்டியிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலையில், பல்வேறு முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுவருகின்றது.

இதன் ஒரு கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரன் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சில் ஈடுபட்டிருப்பதாக உறுதியற்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் போது நேரடியாக இல்லாமல் மறைமுக ஆதரவை வழங்கவேண்டும் என்று சுமந்திரன் கோரிக்கை விடுத்ததாகவும் சில நம்பிக்கையற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.