தமிழ்த் தலைமைகளுக்கு செய்தியொன்றை சொல்லியுள்ள மக்கள்

Report Print Kumar in அரசியல்

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளுக்கு மக்கள் ஒரு செய்தியை சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு - ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த உடல் திறனாய்வு இல்ல விளையாட்டு போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளுக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமருக்கும் மக்கள் ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றார்கள்.

அதனை ஒவ்வொரு கட்சிகளும் சரியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும். கிழக்கிலிருக்கின்ற தமிழ்க் கட்சிகள் கலந்து பேசி ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டும்.

இல்லாவிட்டால் வரவிருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டி ஏற்படும்.

இந்த உள்ளூராட்சித் தேர்தலில் சில பின்னடைவுகளை சந்தித்தால் பரவாயில்லை. கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு கிழக்கு மாகாண மக்களின் இருப்பை உறுதிப்படுத்தி கொள்வதற்கு மக்கள் நலனை மையப்படுத்தி கட்சிபேதங்களுக்கு அப்பால் இங்கிருக்கின்ற தமிழ்த் தலைமைகள் கலந்து பேசவேண்டும்.

எமக்கு அரசியல் மற்றும் கட்சி என்பதற்கு அப்பால் எங்கள் மக்களும் மக்கள் சார்ந்த இருப்பும் முக்கியமானதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.