நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை!

Report Print Samy in அரசியல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதுமில்லை.

ஆனாலும் பெப்ரவரி 10ஆம் திகதி நெருங்கும் வேளையில் நாட்டில் உருவாகியிருந்த அரசியல் பதற்றமானது, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பாக இப்போது மாற்றமடைந்திருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பான பொதுஜன பெரமுன கட்சி இத்தேர்தலில் 232 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் ஈட்டியுள்ள வெற்றியை நாட்டின் அரசியல் வரலாற்றில் சாதாரணமானதொன்றாகக் கருதி விட முடியாதிருக்கின்றது.

கடந்த 1977ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்தலின் போது, அன்றைய எதிர்க்கட்சியாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.

நாட்டின் மொத்தமாக உள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 232 சபைகளை பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ள போதிலும், எதிர்வரும் 2020ம் ஆண்டு வரை ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பே இல்லையென்று பலர் வாதிடக் கூடும். அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் இருப்பதாக அரச தரப்பினர் உறுதியாகக் கூறவும் முடியும்.

ஆனாலும் கூட்டரசாங்கத்தை அமைத்திருக்கும் தோழமைக் கட்சிகளான ஐ.தே.க.வுக்கும் சு.கவுக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு வீழ்ச்சியடைந்திருப்பதையும், மஹிந்த சார்புக் கட்சிக்கு ஆதரவு மேலோங்கியிருப்பதையும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்துவதனால், இனிமேலும் அரசு தனது பலத்தை வார்த்தைகளால் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பது உசிதமானதல்ல.

இந்த தேர்தல் முடிவு மூலம் நாட்டின் அரசியலில் தளம்பல் நிலையொன்று உருவாகலாமென்பது பலரது கருத்தாக இருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக நாட்டின் சிறுபான்மை இனங்களின் பிரச்சினைக்குத் தீர்வைத் தரக் கூடிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கும் முட்டுக்கட்டை ஏற்படப் போகின்றது.

ஆட்சி மாற்றமொன்றுக்கு 2020 வரை வாய்ப்பே இல்லை. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்படுமென்ற கருத்தை மஹிந்த சார்பினர் பரப்பி வருகின்றனர்.

எனவே உள்ளூராட்சித் தேர்தல் முடிவின் மூலம் அறியப்பட்டுள்ள மக்களின் இன்றைய மனோநிலையை கூட்டரசின் இரு பிரதான கட்சிகளான ஐ.தே.கவும் சு.கவும் இலகுவாக உதாசீனம் செய்து விட முடியாது.

இரு கட்சிகளும் இணைந்து அரசின் செல்வாக்கு வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கும், மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் துரிதமான செயல்திட்டங்களில் இறங்குவது தான் இப்போதைய அவசரத் தேவை.

ஐ.தே.கவும் சு.கவும் அரசுக்குள் இருந்தபடியே தத்தமது செல்வாக்கையும் முன்னுரிமையையும் நிலைநிறுத்திக் கொள்வதிலேயே இனிமேலும் கவனம் செலுத்த முற்படுமானால், எதிர்காலத்தில் விளைவுகள் பாரதூரமாகவே அமையுமென்பதில் ஐயமில்லை.

இது ஒருபுறமிருக்க, மஹிந்த தரப்பின் எழுச்சியும், ஐ.தே.க மற்றும் சு.கவின் பின்னடைவுமே முதலில் இங்கு ஆராயப்பட வேண்டியவையாகும்.

கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது சிங்கள மக்களால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை மாத்திரம் எடுத்துக் கொள்வோமானால் அன்றைய நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் பாரிய வேறுபாடு கிடையாது.

சிங்கள மக்களில் கூடுதலானவர்கள் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இன்றும் கூட ராஜபக்சவினரையே ஆதரித்து வருகின்றார்கள்.

யுத்த காலத்தில் மாத்திரமன்றி, யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவினர் தூண்டி வருகின்ற சிங்கள தேசியவாத சிந்தனை காரணமாகவே பெரும்பான்மை மக்கள் மத்தியில் இவ்விதமான ராஜபக்ச எழுச்சியானது இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

ராஜபக்சவினரின் வெளிப்படையான சிங்கள தேசியவாத எழுச்சிப் பிரசாரங்களே இன்றைய தேர்தல் முடிவில் இத்தகைய பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அதேசமயம், ராஜபக்சவினருக்கு நிகரான விதத்தில் இனவாதத்தையோ அன்றி சிங்கள தேசியவாதத்தையோ பெரும்பான்மை மக்கள் மத்தியில் பகிரங்கமாக பிரசாரப்படுத்தக் கூடிய மனத்திராணியும், அரசியல் கீழ்மையும் மைத்திரியிடமும் ரணிலிடமும் இல்லாததும் அவர்களது இன்றைய பின்னடைவுக்குப் பிரதான காரணங்களாகி விட்டன.

2015 தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் முன்னுரிமையளித்த ஏராளமான விடயங்கள், ராஜபக்சவினருக்கு சாதகமாக அமைந்து விட்டதையும் இவ்விடத்தில் குறிப்பிடாமலிருக்க முடியாது.

மஹிந்தவின் அரசாங்கம் பெற்றுக் கொண்ட வெளிநாட்டுக் கடன்களிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இன்றைய அரசு முன்னுரிமை அளித்ததனால் ஏற்பட்ட பணவீக்கமானது, அரசியல் பக்குவமற்ற மக்களை சலிப்படையச் செய்திருக்கிறது.

அன்றைய அரசு இழைத்த போர்க்குற்றங்கள் மீதான சர்வதேச குற்றச்சாட்டுகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இன்றைய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை, ராஜபக்சவினர் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியபடி சிங்கள மக்கள் மத்தியில் அரசு மீது எதிர்ப்பை உருவாக்கியிருக்கின்றனர்.

தமிழ், முஸ்லிம் மக்கள் அளித்த வாக்குகளையும், சிங்கள மக்களின் வாக்குகளையும் வைத்துப் பார்க்குமிடத்து இனவாதத்தின் விளைவுகளே தேர்தல் முடிவுகளில் வெளிப்படுவதைக் காண முடிகின்றது.

ஜனநாயகம், ஊழல் மோசடியற்ற நல்லாட்சி என்பதற்கெல்லாம் அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் தூவப்படுகின்ற விஷமத்தனமான சிந்தனைகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இலங்கை அரசியல் இதுவே நியதியாகி விட்டது.