ஹக்கீமை முற்று முழுதாக நிராகரித்த சாய்ந்தமருது

Report Print Nesan Nesan in அரசியல்

ரவூப் ஹக்கீமின் கோரிக்கையை முற்று முழுதாக நிராகரிக்கிறோம் என சாய்ந்தமருது பிரதேச சுயேட்சை குழுவின் தலைவர் எம்.எச்.எம் நைவ்பர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசம் சார்பாக சுயேட்சையாக போட்டியிட்டு ஆறு ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கூறுகையில், நாம் மூன்று மாதங்கள் போராடிய போராட்டத்திற்கு இன்று ஒரு முடிவு வந்துள்ளது.

எந்த அரசியல் கட்சியினதும் தலையீடுகள் இன்றி எமது பிரதேசத்தில் சுயேட்சையாக சாய்ந்தமருது மக்களது விருப்பின் பேரில் களமிரங்கி 06 ஆசனங்களை கைப்பற்றியுள்ளோம்.

அந்தவகையில் நாம் கேட்டதற்கு இணங்க எமது சாய்ந்தமருது பிரதேசத்திற்கான நகரசபை கட்டாயம் பிரித்தெடுக்கும் வரை நமது போராட்டம் தொடரும்.

அத்துடன் நேற்றைய தினம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்த செய்தியின் பிரகாரம் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எங்களிடம் பொதுவான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அது என்னவென்றால் கல்முனை மாநகரசபையினை அமைப்பதற்கு நிபந்தனையற்ற கோரிக்கையின் பிரகாரம் மேயர் பதவியினையும் தந்து எல்லாவிதமான வசதிகளையும் தருகின்றோம் என வாருங்கள் என்றார் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் அம்பாறை இறக்காமத்தில் கூறியிருக்கின்றார், கல்முனை மாநகரசபையில் சுயேட்சைக்குழுவினை அமர விடமாட்டோம் என்று அப்படி சொன்ன தலைவர் நேற்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்.

இவரது கோரிக்கையை எமது ஊர் மக்கள் சார்பாகவும் பள்ளிவாசல் சார்பாகவும் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.