மைத்திரியைக் காப்பாற்றத் தயாராகும் மகிந்த! அடுத்த கட்டத்தை நோக்கி கொழும்பு அரசியல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும், மைத்திரி ரணில் அரசாங்கத்தின் அடுத்த நகர்வுகள் எப்படியிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச சார்புடைய கட்சி பெரும் வெற்றியைப் பெற்று இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.

இந்நிலையில், பிரதமர் தன்னுடைய பதவியில் இருந்து இறங்கி, இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அக்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் அழுத்தம் கொடுக்கின்றார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவிற்கும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரதமரை மாற்ற வேண்டும் என்ற ஒரு தரப்பும், மகிந்த ராஜபக்சவோடு இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன.

இதற்கிடையில், நேற்றும், இன்றும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இரண்டு தடவை சந்திப்பு இடம்பெற்று கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, ரணில் எடுக்கும் முடிவுகள் குறித்து எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிரதமர் தன்னுடைய பதவியில் இருந்து விலகக் கூடும் என்கின்றன கொழும்புத் தகவல்கள். இதேவேளை ஜனாதிபதி பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் இரவு கூட்டு எதிர்க் கட்சியினரிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஒன்றை நடாத்த அழைப்பு விடுப்பாராயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தீர்மானித்திருக்கிறது.

இன்றிரவு மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு கூட்டு எதிர்க் கட்சி இன்று (13) கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.