பொதுத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் இரண்டையும் உடன் நடத்தக் கோரிக்கை!

Report Print Aasim in அரசியல்

பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் இரண்டையும் உடனடியாக ஒரே நாளில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமல் ராஜபக்‌ஷ வலியுறுத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுண கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவானவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை கதிர்காமத்தில் நடைபெற்றது. இதில் தலைமை வகித்து உரையாற்றிய முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு எனக்கு தூது அனுப்பப்படுகின்றது. ஆனால் நான் பொதுமக்களின் விருப்பத்துக்கு எதிராக பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்குப் பதில் வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருப்பது மேல்.

அதே போல நாங்கள் எதிர்வரும் காலத்தில் தனியாக ஆட்சி அமைப்போம். எந்தவொரு கட்சியுடனும் கூட்டுச் சேர மாட்டோம். எங்களை விட்டு விலகிச் சென்றவர்களை இணைத்துக் கொள்ளவும் மாட்டோம்.

ஏனெனில் பொதுஜன பெரமுணவின் கொள்கைகள் ஏனைய கட்சிகளை விட வித்தியாசமானவை. அந்தக் கொள்கைகளின் அடிப்படையிலேயே எமது ஆட்சியும் அமைந்திருக்கும்.

தற்போதைய நிலையில் பொதுமக்கள் இந்த அரசாங்கத்தை நிராகரித்து விட்டார்கள். எனவே உடனடியாக பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் இடமளிக்க வேண்டும் என்றும் சமல் ராஜபக்‌ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.