ஐ.தே.க உடன் கூட்டமைப்பு கைகோர்த்துக்கொண்டதா? சுமந்திரன் கூறிய தகவல்

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் கிடையாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கைகளும் தங்களுக்கு முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கட்சி ஆட்சியை அமைத்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானங்களை மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை், நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் தேசிய அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளன.

இதனால் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான பின்னணியிலேயே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் மறுப்பு வெளியிட்டுள்ளார்.