பரபரப்புக்கு மத்தியில் கூட்டமைப்பின் குழப்பமான கருத்துக்கள்

Report Print Shalini in அரசியல்

இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பற்றி அனைவருமே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

வடக்கில் தமிழ் கட்சிகளும் தெற்கில் மஹிந்த அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டரசாங்கத்தின் நிலை கேள்விக்குறியாகி விட்டது.

ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு ஒரு தரப்பினரும், ஐக்கிய தேசியக்கட்சி தனித்து ஆட்சியமைக்கப் போகின்றது என மற்றுமொரு தரப்பினரும் கூறிவரும் நிலையில், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் திடீர் சந்திப்புக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என்ற நிலை வந்தால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமா என்பது அனைவருடைய கேள்வியாகவும் இருந்து வருகின்றது.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளிடம் இருந்து வரும் செய்திகளும் மக்களை சற்று குழப்பமடையவே செய்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை, மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு காணப்படுகின்றன.

சுமந்திரனின் கருத்து..

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் கிடையாது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கைகளும் தங்களுக்கு முன்வைக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கட்சி ஆட்சியை அமைத்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானங்களை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் கருத்து..

ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது.

அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணியை அமைப்பது குறித்து யாரும் பேச்சு நடத்த எம்மை அணுகவில்லை.

அவ்வாறு யாரும் அணுகினால், அதுபற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

உள்ளூராட்சித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான தெளிவான செய்தி ஒன்றை மக்கள் வழங்கியுள்ளனர்.

மக்களின் அந்த ஆணையை நாங்கள் மதிக்க வேண்டும்.

மாவை சேனாதிராசாவின் கருத்து..

ஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானத்தை எடுப்போம்.

ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை தமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை, அழைப்பு விடுக்கும் பட்சத்தில் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளோம். என்று குறிப்பிட்டுள்ளார்.