தெற்கு அரசியலையே புரட்டிபோடும் தீர்மானமொன்றை மைத்திரி எடுக்கக்கூடும்

Report Print Rakesh in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவானது மத்திய அரசையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், சாதாரணப் பெரும்பான்மையுடன் தனியாட்சி அமைப்பதற்குரிய முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள பிரதமர் ரணில், கட்சிக்குள்ளும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தமிழ்ப் பத்திரிகை ஒன்று இன்றைய தினம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கட்சிக்குள் இருந்தும், வெளியிலிருந்தும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அழுத்தங்களையடுத்தே உள்ளக மாற்றத்துக்கு ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளார்.

இதன்பிரகாரம் முக்கிய பதவிகள் இளம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளில் மாற்றம் வரவுள்ளதோடு, சிரேஷ்ட தலைவர் என்ற புதியதொரு பதவியும் உருவாக்கப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை சமாளிக்கும் வகையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர் பதவிக்கான பட்டியலில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருக்கின்றன எனவும், பொதுச்செயலாளராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவு செய்யப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 239 சபைகளைக் கைப்பற்றி மஹிந்த அணி விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரகசிய சந்திப்புகள், கட்சி தாவலுக்கான ஏற்பாடுகள், கூட்டணி அமைத்தல் ஆகிய செயற்பாடுகளால் அரசியல் களம் கொந்தளிப்பாகவே இருக்கின்றது.

தேர்தல் முடிவானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பேரிடியாக அமைந்ததால் கூட்டரசிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதில் அக்கட்சி உறுப்பினர்கள் விடாப்பிடியாக நிற்கின்றனர்.

தங்கியிருக்க வேண்டுமானால் பிரதமர் பதவி துறக்கவேண்டுமென அவர்கள் நிபந்தனையையும் முன்வைத்துள்ளனர். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளன.

இதனால் கட்சியின் தலைமைப் பதவியிலும், அரசிலும் மாற்றம் அவசியம் என்று ஐ.தே.கவின் எம்.பிக்களும், அமைச்சர்களும் கூட்டாக வலியுறுத்தி வருவதால் பிரதமர் ரணிலுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சி உறுப்பினர்களுடன் அவர் தொடர் சந்திப்புகளை நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற சந்திப்பின்போது கட்சிக்குள் மாற்றம் செய்வதற்கு அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

அதன்பின்னர் நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதியைச் சந்தித்தார் பிரதமர். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதி திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.

எனினும், பிரதமர் பதவியைத் துறப்பதற்கு ரணில் மறுத்துவிட்டார் எனவும், தனித்து ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரினார் எனவும் தெரியவருகின்றது.

ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் நேற்றுக் காலை முதல் கட்சி முக்கியஸ்தர்களுடன் கட்டம் கட்டமாக பிரதமர் பேச்சு நடத்தியிருந்தார். மேற்படி சந்திப்புகளின்போது கட்சிக்குள் மாற்றமொன்று அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தனியாட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனும் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.

இதன்பிரகாரம் இன்று அல்லது நாளை தனியாட்சி அமைப்பதற்குரிய அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் கொண்டுவருவதற்குப் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதால் பிரதமர் பதவியில் மாற்றம் வராது என்று ஒரு சிலரும், அவ்வாறு இல்லை, இறுதி நேரத்தில்கூட தலைகள் உருளலாம் என்று மற்றும் சிலரும் எதிர்வு கூறுகின்றனர்.

இதேவேளை, மைத்திரி பக்கமுள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலரை வளைத்துப் போடுவதற்குரிய முயற்சியிலும் ஐ.தே.கவில் ரணிலுக்கு விசுவாசமானவர்கள் இறங்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் என்றும் அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

சிலவேளை, ஜனாதிபதியும் இறுதிக்கட்டத்தில் தெற்கு அரசியலையே புரட்டிபோடும் வகையிலான தீர்மானமொன்றை எடுக்கக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.