ஜனாதிபதி - பிரதமர் உயர்மட்ட சந்திப்பில் பேசப்பட்டது என்ன? இந்தியாவின் ஆதரவு யாருக்கு?

Report Print Samaran Samaran in அரசியல்

தெற்கு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து பிரதமர் ரணில் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒவ்வொரு மணித்தியாலத்திலும் நிலவரம் மாற்றமடைந்து வரும் நிலையில் சிறிகொத்தாவில் உள்ள நம்பிக்கையான வட்டாரங்களின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலையில் தனித்து ஆட்சியமைக்கும் வல்லமை ஐ.தே.கவிற்கு உள்ளது. சுதந்திரக்கட்சியில் இருந்து தாவி வரும் உறுப்பினர்களின் மூலம் ஆட்சியமைக்க தயாராக இருக்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு செல்வதற்கு முன்னர், பிரதமர் பதவி விலகிக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ஏற்பாட்டின் பிரகாரம், ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் கடிதம் நேற்று மதியமே தயாரிக்கப்பட்டு விட்டது.

நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து, பதவி விலகல் கடிதத்தை கொடுக்க பிரதமர் தலைமையில் ஐ.தே.கவினர் சென்றனர்.

இதன்போது, ரணிலை வரவேற்ற ஜனாதிபதி, ஒரு அதிர்ச்சி வைத்தியமளித்தார்.

மீண்டும் பெரும்பான்மையை நிரூபித்து ஐ.தே.க ஆட்சியமைத்தாலும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கமாட்டேன் என்றார்.

கரு ஜெயசூரியாவை பிரதமராக நியமிக்கலாமென ஆலோசனையும் வழங்கினார். இந்த விடயத்தில் தான் முடிவுகளை எடுக்க முன்னர், ரணிலே அனைத்தையும் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, கரு ஜெயசூரியவை தொடர்பு கொண்ட ஜனாதிபதி, பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், கட்சியின் முடிவை மீறி எதையும் செய்ய போவதில்லை என அவர் மறுத்து விட்டார்.

இன்று காலை, மதியம் நடந்த ஐ.தே.க உயர்மட்ட கூட்டத்தில், “நாம் ஆட்சியமைத்தால் பிரதமர் யார் என்பதை நாம்தான் தீர்மானிப்போம். ஜனாதிபதியல்ல“ என ஐ.தே.கவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்

இந்த விடயத்தை அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களிற்கான இராஜாங்க செயலாளர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரிடம் ஐதேக தலைமை இன்று காலையில் தெரிவித்துள்ளது.

எனினும், ரணிலை பதவி விலகி, கரு ஜெயசூரியவை பதவியேற்க வைக்கலாமென இந்திய தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த சிங்கள வாக்குகளை கவர அவர்தான் பொருத்தமானவர் என கருதப்படுகிறது.

இதற்குள், சஜித் பிரேமதாசவிற்கு கட்சி தலைமை வழங்கப்பட வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்று இரவிற்குள் ரணில் பதவிவிலக வாய்ப்புள்ளதாக சிறிகொத்தா வட்டாரங்கள் கூறுகின்றன.