மைத்திரி ரணில் குழப்பத்தின் எதிரொலி! வீழ்ந்தது பங்குச் சந்தை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்பமான நிலையையடுத்து பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 10ம் திகதி இலங்கையில் உள்ள 341 மன்றங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், 340 மன்றங்களுக்கு மட்டுமே அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பெரும்பான்மையான வாக்குகள் பெறாத நிலையில், மகிந்த ராஜபக்சவின் மொட்டு சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் கிடைத்திருந்தன.

இதனையடுத்து, தேர்தலில் இழப்புக்கள் ஏற்பட்டதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சிப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலக வேண்டுமென, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

ஒருபுறத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் ஜனாதிபதிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரண்டு, மூன்று முறை பேச்சுக்கள் நடைபெற்று இருக்கின்றன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இது குறித்து ஜனாதிபதி அறிவிப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த குழப்பகரமான அரசியல் சூழ்நிலைகளையடுத்து, நாட்டின் பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொருளியல் ஆய்வாளர் அசந்த சிறிமான்ன, அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தேகத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைச் சீர்செய்ய அரசியல் ஸ்தீரத் தன்மையொன்றுக்காக அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் இந்த குழப்பகரமான சூழ்நிலை நீடித்துக் கொண்டிருப்பதனால் பெரும் சரிவை நோக்கி பங்குச் சந்தை சென்று கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.