பிரதமர் பதவியை நிராகரித்த முக்கியஸ்தர்கள்? தொடரும் இழுபறி

Report Print Murali Murali in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரிய அல்லது அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கும் படி முன்மொழியப்பட்ட யோசனையை இருவரும் நிராகரித்துள்ளனர்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இரு பிரதான கட்சிகளும் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றிருந்தது. இதனால் தேசிய அரசாங்கத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகி, வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை தெரிவித்திருந்தார்.

புதிய பிரதமராக சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சிரேஷ்ட அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இருவரும் பிரதமர் பதவியை நிராகரித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ளாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என குறித்த இருவரும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக தொடர்ந்தும் குழப்ப நிலை நீடித்துள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.