பொதுஜன பெரமுணவுக்கு எதிராக முஸ்லிம்களை திசைதிருப்ப சதி?

Report Print Aasim in அரசியல்

பொதுஜன பெரமுண கட்சிக்கு எதிராக முஸ்லிம்களை திசை திருப்ப அரசாங்கம் சதி செய்வதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் பின்னர் நாடளாவிய ரீதியில் பொதுஜன பெரமுண ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களினால் முஸ்லிம்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுண தரப்பினரின் முஸ்லிம்களுக்கு எதிரான அடாவடிகளை நிறுத்துமாறு முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் பொதுஜன பெரமுணவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு பகிரங்க கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கூட்டு எதிர்க்கட்சி இன்று ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. அதில் முஸ்லிம்களுக்கு எதிரான அடாவடிகள் அரசாங்கத்தின் சதி நடவடிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு யாரேனும் பொதுஜன பெரமுண ஆதரவாளர் அல்லது பிரமுகர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் கூட்டு எதிர்க்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்புலம் குறித்து தற்போது முஸ்லிம்கள் உண்மையை உணர்ந்து கொண்டுள்ள காரணத்தினால் பொதுஜன பெரமுணவை ஆதரித்து வருவதாகவும், அதனைக் குழப்பும் வகையில் அரசாங்கம் இவ்வாறான சதியொன்றை அரங்கேற்றி வருவதாகவும் அந்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமித்து உண்மைகளை கண்டறியுமாறும் கூட்டு எதிர்க்கட்சி தனது ஊடக அறிக்கையில் சவால் விட்டுள்ளது.