தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்!

Report Print Samy in அரசியல்

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டன.

தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அநேகமான உள்ளூராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய பலத்தைப் பெற்றிருக்கவில்லை. கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கான காரணமாகும்.

அதுமட்டுமல்லாது புதிய தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் எதிரணிக்கட்சிகளுக்கு விகிதாசார கணக்கீட்டு முறையில் அதிக ஆசனங்களும் கிடைத்தன.

இந்த முறை கூட்டமைப்புத் தரப்புக்கு ஆதரவாக வாக்களிப்பதில் மக்களிடையே ஆர்வம் குறைந்து காணப்பட்டதால், அதன் எதிர்விளைவுகளை எம்மால் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல்கள் இடம்பெறவுள்ளமை உறுதியானதும், அதற்கான ஆயத்த வேலைகளில் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் உடனடியாக இறங்கி விட்டனர்.

குறிப்பாக ஈ.பி.டி.பி. யினரும், காங்கிரஸ் கட்சியினரும் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்திப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அங்குள்ள மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்தனர்.இதனடிப்படையிலேயே வேட்பாளர்களின் தெரிவு இடம் பெற்றது.

மக்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு வேட்பாளர் தெரிவு இடம் பெற்றதால், அந்தத் தரப்பினர்களது வெற்றி வாய்ப்பு அதிகமானது.ஆனால் கூட்டமைப்பினர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கு முன்னர் அந்தந்தப் பகுதி மக்களுடன் எவ்வித ஆலோசனைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் எழுந்த மானத்திலேயே வேட்பாளர் தெரிவு இடம் பெற்றது.

ஒரு சில இடங்களில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படாது, வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் களமிறக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.இதனாலும் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.

உள்ளூராட்சித் தேர்தலில் தமக்குஅறிமுகமான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதையே மக்கள் பெரிதும் விரும்புவார்கள்.இதுவொரு பொதுவான நடைமுறையாகும். இதைக்கூடப் புரிந்து கொள்வதற்கு கூட்டமைப்பினர் தவறியுள்ளமை வேதனைக்குரியது.

இதைவிட ஒரு சில தொகுதிகளைத் தவிர ஏனையவற்றில் கூட்டமைப்புக்கு ஆதரவான பரப்புரைகள் மந்தகதியில் இடம் பெற்றதை அவதானிக்க முடிந்தது.இதுவும் கூட்டமைப்பின் வாக்குவங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

ஏதோவொரு வகையில் கூட்டமைப்புக்கு எதிரானதொரு மனோநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். கூட்டமைப்பு எமக்கு எதுவுமே செய்யவில்லை. இவர்களுக்கு வாக்களிப்பதால் என்ன பயன்? என்று மக்கள் கேள்வி எழுப்பியதையும் காண முடிந்தது.

மாற்று அணியினர் அந்த அளவுக்கு மக்களைத் திசை திருப்பியிருந்தனர். மக்களின் மனதிலிருந்து இந்தத் தவறான எண்ணம் களையப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் கூட்டமைப்பு அதற்கான முயற்சிகள் எதையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.இதுவும் எதிர் விளைவுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது அடுத்து இடம்பெறவிருக்கின்ற மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் கூட்டமைப்புக்குச் சவால் நிறைந்ததாகவே அமைந்து விடப் போகின்றன எனக் கருத வேண்டியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கற்றுக் கொண்ட பாடங்கள் எதிரணியினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்குமென்பதில் சந்தேகமில்லை. அவர்கள் ஒன்றாக இணைவதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளன.தமது பொது எதிரியான கூட்டமைப்பை வீழ்த்துவதற்கு அவர்கள் எதைச் செய்வதற்கும் தயாராக இருக்கின்றார்கள்.

கூட்டமைப்பிலிருந்து ஒதுங்கி நிற்கும் விக்னேஸ்வரன் அடுத்த தடவையும் முதலமைச்சர் பதவியில் அமர்வதற்கான சந்தர்ப்பத்துக்காகச் காத்திருக்கிறார்.கூட்டமைப்பு இன்னுமொரு சந்தர்ப்பத்தை தமக்கு வழங்காதென்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இதனால் எதிரணியுடன் ஒட்டிக்கொள்ளவே அவர் விரும்புவார்.

அதைவிட எதிரணியின் தலைமைப் பதவி கூட இவருக்குக் கிடைக்கலாம்.இதனால் கூட்டமைப்புக்கு சவால் விடுகின்ற ஒருவராகவே விக்னேஸ்வரன் மாறி விடுவார். அன்றும் இன்றும் தமிழ் மக்களுக்கு எதையுமே செய்யாத விக்னேஸ்வரன், தலைமைப் பதவியை விரும்பும் ஒருவராகவே காணப்படுகின்றார்.

கொழும்பிலேயே தங்கியிருந்ததுடன் மட்டுமல்லாது, தமிழர்கள் துன்பத்தில் ஆழ்ந்திருந்த தருணங்களில் எட்டிக் கூடப் பார்க்காதவர் இவர்.மாகாணசபைத் தேர்தலோடு வடபகுதிக்கு வந்த இவர், அதன் பின்னரே தமிழர்கள் மீது தாம் அதி அக்கறை கொண்டவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

ஆனால் பதவிச் சுகத்தை அனுபவித்ததைத் தவிர, இவர் உருப்படியாக எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. இவர் இன்னமும் கூட்டமைப்புடன் ஒட்டிக் கொண்டிருப்பது அந்த அமைப்பைப் பலவீனப்படுத்தவே செய்யும்.

சம்பந்தன் மற்றும் மாவைக்கு மாற்றீடான அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாக்கப்படாமை கூட்டமைப்புக்கு எதிர்காலத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடப் போகின்றது.

தந்தை செல்வா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தபோது தளபதி அமிர்தலிங்கமும், வேறு சிலரும் அடுத்த கட்டத் தலைவர்களுக்குரிய தகுதியைக் கொண்டிருந்தனர்.இவர்கள் தந்தை செல்வாவுக்கு அவ்வப்போது ஆதரவாகச் செயற்பட்டனர்.

குறிப்பாக அறிவும், துடிப்பும் மிகுந்த அமிர்தலிங்கம் பலரையும் கவரும் வகையில் கட்சிப் பணிகளை ஆற்றி வந்தார்.அவரது துணைவியார் மங்கையர்க்கரசி அம்மையாரும் தமது கணவருடன் இணைந்து கட்சிக்காக அயராது பாடுபட்டார்.

தேர்தல் வேளைகளில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக இடம்பெறுகின்ற பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொள்ள இவர்கள் தவறுவதில்லை. மக்களும் இவர்களின் உரையைக் கேட்பதற்காக ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.இன்று அவ்வாறான நிலையைக் காண முடியவில்லை.

இளம் தலைவர்களை உருவாக்குவதற்குக் கூட்டமைப்புத் தவறிவிட்டது என்றே கூற வேண்டும்.சம்பந்தன் வயது முதிர்ச்சியின் எல்லையில் நிற்கின்றார். இந்த நிலையிலும் அவர் தமது கடமைகளைச் செவ்வனே ஆற்றி வருகின்றார்.

மாவை கூட வயது முதிர்ந்தவராகக் காணப்படுகிறார். அரசியலில் நீண்ட காலம் உழைத்ததால் அவரும் களைத்துப் போய் விட்டார். ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளார்.

சிலர் இவர்கள் இருவருக்கும் அடுத்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் இருப்பதாகக் கூறுகின்றனர். அதற்குரிய தகுதிகள் இவரிடம் நிறையவே உள்ளன.ஆனால் சில வேளைகளில் இவர் கூறுகின்ற கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி விடுவதால் விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலை இவருக்கு ஏற்பட்டு விடு கின்றது.இவர் வார்த்தைகளை வெளிவிடும்போது அவதானமாக இருந்தால் கூட்ட மைப்பின் அடுத்த கட்டத் தலைவராக மதிக்கப்படுவாரென்பதில் ஐயமில்லை. இவரை விட வேறு இளம் தலைவர்களும் உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

அடுத்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, அரசுக்கு கண்மூடித் தனமான முறையில் ஆதரவை வழங்கிக் கொண்டிருப்பதை ஏற்கவே முடியாது. இந்த ஆதரவுக்குப் பதிலாக அரசு தமிழர்களுக்கு எதையும் செய்ததாகத் தெரியவில்லை.

காணாமல் போனவர்களின் உறவுகள் படுகின்ற வேதனை கொஞ்ச நஞ்சமல்ல.அவர்கள் தமது உறவுகளைத் தேடிப் பல ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தமது நம்பிக்கையை இன்னமும் அவர்கள் இழந்துவிட வில்லை.

இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாணத்துக்கு வந்த அரச தலைவரான மைத்திரிபால சிறிசேன, காணாமல் போனவர்களை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையெனக் கூறிக் கையை விரித்து விட்டார்.

இதனால் கொதித்துப் போன காணாமல் போனவர்களின் உறவுகள், அரசை மட்டுமல்லாது கூட்ட மைப்பையும் திட்டித் தீர்த்து விட்டனர். அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதன் காரணமாகவே கூட்டமைப்புக்கு இந்த அவப் பெயர் ஏற்பட்டது. இது கூட்டமைப்புக்குத் தேவைதானா?

இது தவிர, உள்ளூராட்சிச் சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நேற்றுவரை பரம எதிரிகளாக இருந்தவர்களுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுகளிலும் கூட்டமைப்பு ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகூட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பதவியைப் பெறுவதற்காக எதிரிகளிடம் மண்டியிட்டு நிற்பது அவமானத்துக்குரிய செயலாகும்.எதிர்காலத்தில் இடம் பெறவுள்ள தேர்தல்களை எதிர் கொள்வதற்கு கூட்டமைப்பு இப்போதே தயாராக வேண்டும்.

நேர்மையாளர்களையும், ஒழுக்கமுடையவர்களையும், மக்களால் விரும்பப்படு கின்றவர்களை மாத்திரமே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தவர்களை அடியோடு நிராகரித்துவிட வேண்டும்.

கிராமங்கள் தோறும் கூட்டமைப்பின் கிளைகளை நிறுவி ஒவ்வொரு பகுதி மக்களுடனும் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலே கூறிய விடயங்களில் கூட்டமைப்பு கவனம் செலுத்துமாயின், அதன் எதிர்காலம் பிரகாசமாகவே அமையுமென்பதில் சந்தேகமே இல்லை.

- Uthayan