கிழக்கில் தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார்: கருணா

Report Print Sethu Sethu in அரசியல்

வடக்கு, கிழக்கு தமிழர் தாயக கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார் என தமிழர் ஐக்கிய சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)தெரிவித்துள்ளார்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும், தமிழர் ஐக்கிய சுதந்திர கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் (கருணா) இடையில் தேத்தாதீவில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் என்னை வந்து சந்தித்து கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படுவது தொடர்பாக பேசினார்கள்.

குறித்த பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுடன் இணங்கி வரும் கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க அவர்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தார்கள்.

நான் அதனை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கின்றேன். ஏனெனில் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தையே கிழக்கு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அதனை நாமும் ஏற்றுக் கொண்டு கிழக்கில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு குடையின் கீழ் ஒரு சின்னத்தில் போட்டி இட்டால் தமிழர்கள் மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும் .

என்னை பொறுத்தமட்டில் கிழக்கு தமிழர் ஒன்றியம் போன்ற ஒரு அமைப்பு தற்போதைய காலக்கட்டத்திற்கு கட்டாயம் தேவையான ஒன்று. அதனை கட்சி பேதங்களை மறந்து படித்த புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் இணைந்து பலப்படுத்த வேண்டும்.

இந்த அமைப்பை ஒரு நடுநிலையாளர்களாக ஏனைய தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொண்டு அவர்களது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே கிழக்கு தமிழர்களின் இருப்பை பாதுகாக்க முடியும்.

எனவே கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு நான் பூரண ஆதரவு வழங்க தயாராக உள்ளேன். ஏனைய தமிழ் கட்சிகளும் இதற்கான ஆதரவினை வழங்கி தமிழ் மக்கள் கிழக்கில் ஓரணியில் ஒன்றிணைய உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், எதிர்காலத்தில் தமிழ் கட்சிகள் ஓரணியில் இணைந்து செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.