அரசியல் நெருக்கடியை தணிய வைத்த ஜனாதிபதி!

Report Print Samy in அரசியல்

இலங்கையின் தேசிய அரசியலில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் கொதிநிலை குறித்து உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் அறிவிக்கப்படும் வரையும் தேசிய அரசாங்கத்தைக் கொண்டு செல்லுமாறு ஸ்ரீ ல.சு.க. மற்றும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஆலோசனை வழங்கினார்.

அந்த ஆலோசனைக்கு ஏற்ப ஐக்கிய தேசியக் கடசியுடனான தேசிய அரசாங்கத்தைக் தொடர்ந்து கொண்டு செல்ல ஸ்ரீ.ல.சு.க._ ஐ.ம.சு.முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.

இலங்கையின் தேசிய அரசியலில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் கொதிநிலை நேற்று முன்தினம் முதல் தணிந்து விட்டது.

இந்த அரசியல் கொதிநிலை குறித்து தேசிய அரசாங்கத்தின் பங்காளியாக விளங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் அழைத்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

அதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் அறிவிக்கப்படும் வரையும் தேசிய அரசாங்கத்தைக் கொண்டு செல்லுமாறு ஸ்ரீ ல.சு.க. மற்றும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனைக்கு ஏற்ப ஐக்கிய தேசியக் கடசியுடனான தேசிய அரசாங்கத்தைக் தொடர்ந்து கொண்டு செல்ல ஸ்ரீ.ல.சு.க._ ஐ.ம.சு.முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.

இது 'தேசிய அரசாங்கம் கலைந்து விடும், வீழ்ச்சியடைந்து விடும்' என்று மனப்பால் குடித்தவர்களுக்கு தக்க பதிலடியாகும்.

தேசிய அரசாங்கமே தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்யவிருக்கின்றது. தற்போது தணிவடைந்துள்ள அரசியல் கொதிநிலை குறித்து கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது.

அதாவது 2015 ஆம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் தனிப்பெரும்பான்மையை பெறாத காரணத்தினால் ஐ.தே.க.வும், ஸ்ரீ.ல.சு.க. வும் இணைந்து இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை மேற்கொண்டு வந்தன.

இவ்வாறான நிலையில் கடந்த 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலைப் போன்றல்லாமல் ஐ.தே.க. வும், ஸ்ரீ.ல.சு.க. வும் இத்தேர்தலில் தனித்தனியாகக் களமிறங்கின.

அதனால் ஐ.தே.க 3,612,259 வாக்குகளையும், ஜனாதிபதி த​ைலமையிலான ஸ்ரீ.ல.சு.கா 1,481,656 வாக்குகளையும் இத்தேர்தலில் பெற்றுக் கொண்டன. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுக் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4,941,952 வாக்குகளைப் பெற்றது.

இத்தேர்தலில் ஐ.தே.க. வும், ஸ்ரீ.ல.சு. க.யும் பெற்றுக் கொண்ட வாக்குகளை ஒன்று சேர்த்துப் பார்த்தால் அது முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவு பெரமுன பெற்ற வாக்குகளை விடவும் அதிகமாகவே உள்ளது.

அதேநேரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்தலானது ஜனாதிபதியையோ, பிரதமரையோ, அரசாங்கத்தையோ மாற்றுவதற்கான தேர்தலும் அல்ல.

இருந்தும் இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ள வசதியாக மறந்து விட்ட சிலர் தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஐ.தே.க. வுடனான இணக்கப்பாட்டு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருக்கப் போவதில்லை என்றும், ஸ்ரீ.ல.சு.கட்சி தனியாக அரசாங்கம் அமைக்கும் என்றும் கூறினர். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

இவ்வரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதாயின் புதிய ஒருவரைப் பிரதமராக நியமிக்குமாறும் கோரிக்கைககளும் முன்வைக்கப்பட்டன.இக்கோரிக்கை வெளிப்பட்ட உடனேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 'ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பிரதமர் பதவியையோ, அரசாங்கத்தையோ பொறுப்பேற்காது' என்று பகிரங்கமாக அறிவித்தார்.

இருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாட்டு அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். இதேவேளை தேவைப்படும் பட்சத்தில் ஐ.தே.க தனித்தும் ஆட்சி அமைக்கத் தயாராக உள்ளது என்றும் ஐ.தே.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான அரசியல் கொதிநிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'தான் பதவி விலகப் போவதில்லை' எனவும் 'தாம் அரசியலமைப்புப்படியே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் முழு நாட்டு மக்களதும் கவனம், பார்வை தேசிய அரசியலின் பக்கம் திரும்பின. சர்வதேசமும் இலங்கை அரசியலின் நெருக்கடி நிலை குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்தன.

இக்கொதி நிலையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதன் அவசியத்தை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளதும் தலைவர்களை வெளிநாட்டு இராஜ தந்திரிகள் தனித்தனியாகச் சந்தித்து எடுத்துக் கூறினர்.

என்றாலும் ஆட்சி மாற்றம், புதிய பிரதமர் நியமனம் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்திய சந்திப்புகள், கலந்துரையாடல்கள் கடந்த 09 நாட்களாக பல மட்டங்களில் இடம்பெற்று வந்தன.

இவ்வாறான பின்புலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து அரசியல் கொதிநிலை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு தேசிய அரசாங்கத்தைத் தொடர்ந்தும் கொண்டு செல்லுமாறும் ஆலோசனை வழங்கினார்.

அதற்கேற்பவே ஸ்ரீ.ல.சு.கட்சி எம்.பிக்கள் இணக்கப்பாட்டு அரசாங்கத்தைத் தொடர்ந்து கொண்டு செல்லத் தீர்மானம் எடுத்துள்ளனர்.இதன் ஊடாக ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த அரசியல் கொதிநிலை தணிந்து விட்டது. தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாட்டில் அச்சம் பீதியில்லாத சுதந்திர ஜனநாயக சூழலை நாட்டில் ஏற்படுத்திய தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்க வேணடும் என்பதே நாட்டை உண்மையாக நேசிப்பவர்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டியது உண்மையான மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

thinakaran