அரசியல் தவறுகள் திருத்தப்படாவிட்டால் நாம் மக்களிடமிருந்து ஒதுக்கப்படுவோம்

Report Print Ashik in அரசியல்

மன்னார் மாவட்டம் 42 வருடங்களுக்கு பிறகு தேசியக்கட்சி ஒன்றினால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தற்போதைய தமிழ் தலைமைகளும், மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என த.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் கட்சிகளிடமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமும் காணப்படும் ஒற்றுமையீனமே இந்த பரிதாபகரமான வீழ்ச்சிக்கும், தோல்விக்கும் காரணமாக இருக்கின்றது.

1976இல் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஒன்றில் சில பத்து வாக்குகளால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றது.

அதன் பின்னர் 42 வருடங்கள் பின் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியிடம் மன்னார் மாவட்டம் பறிபோயுள்ளது. இது மன்னாரில் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.

இதன் விளைவுகள் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை புரட்டிப்போட்டு விடப்போவதை நாம் சாதாரணமாக எடுத்துவிட முடியாது.

இந்த நிலை தொடர்ந்தால் எமது அரசியல் உரிமைக்கான பயணம் அஸ்தமிக்கப்பட்டு கையறு நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

எமது மக்கள் சரியானஅரசியல் பாதை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதையும், தடம்மாறிச் சென்று கொண்டிருப்பதையும் தமிழ் தலைமைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல் தவறுகள் திருத்தப்படாவிட்டால் நாம் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்படுவோம்.

இந்த நோய்க்கான காரணம் உடனடியாக கண்டறியப்பட வேண்டும். உடனடி அவசர சிகிச்சை செய்து கொள்ளப்படாவிட்டால் அரசியல் உரிமைக்கான உயிர்ப்பை மரணப்படுக்கையிலிருந்து காப்பாற்ற முடியாது போகும்.

முதலில் மக்கள் மத்தியில் எழுந்து வரும் அரசியல் விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும், ஏனைய தமிழ்க் கட்சிகளிடமும் வரவேண்டும்.

அரசியல் தவறுகள் ஆராயப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும், தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டிருக்க வேண்டும் எனக்கோருகின்ற போதெல்லாம் நாம் மேலும் உடைந்து சிதறிப்போகின்றோம்.

மன்னாரில் ஒரு மாகாண அமைச்சர் உட்பட 3 மாகாணசபை உறுப்பினர்களையும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்ற போதும் ஒரு அமைச்சரையும் ஒரு மாகாணசபை உறுப்பினரையும் கொண்ட ஐ.தே.கட்சியினால் மன்னாரின் அரசியல் தலைமை தமிழ் கட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.

இதற்கான தார்மீக பொறுப்பை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். தேசியக் கட்சி ஒன்றிடம் மன்னாரை தாரைவார்த்துக் கொடுக்க ஒன்றும் அவர்களை மக்கள் தெரிவு செய்யவில்லை, இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் நடைபெற இருக்கின்ற தொகுதி வாரியான மாகாணசபைத் தேர்தலிலும் மன்னாரின் மூன்று தொகுதிகளையும் மிக இலகுவாகவும், பரிதாபகரமாகவும் தேசிய கட்சிகளிடம் தாரைவார்த்துக் கொடுக்கும் கைங்கரியத்தையும் செய்துவிட்டுச் செல்லட்டும் என குறிப்பிட்டுள்ளார்.